June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

​பாஜக செய்தியாளர் சந்திப்பு: 2026-27 பட்ஜெட் புதுச்சேரியின் வளர்ச்சிக்கு உந்துசக்தி – மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம் பெருமிதம்!

​புதுச்சேரி:

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்த 2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் குறித்து விளக்கமளிக்க புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
​இந்த சந்திப்பில் மாநிலத் தலைவர் திரு. வி.பி. ராமலிங்கம் (முன்னாள் எம்.எல்.ஏ) தலைமை தாங்கினார். மாநிலச் செய்தித் தொடர்பாளர் திரு. அருள்முருகன் மற்றும் மாநில ஊடகப்பிரிவுத் தலைவர் திரு. நாகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

​ “இந்த பட்ஜெட் புதுச்சேரியை வெறும் யூனியன் பிரதேசமாக மட்டும் பார்க்காமல், உற்பத்தி, சுற்றுலா மற்றும் MSME துறைகளின் மையப்புள்ளியாக மாற்ற வழிவகை செய்துள்ளது” என திரு. வி.பி. ராமலிங்கம் தெரிவித்தார்.
​புதுச்சேரி போன்ற பகுதிகளில் உள்ள சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க ₹10,000 கோடியில் வளர்ச்சி நிதி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டது.
​விவசாயிகளுக்கு உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “பாரத் விஸ்தார்” (Bharat-VISTAAR) AI கருவி மற்றும் தென்னை, முந்திரி சாகுபடி விவசாயிகளுக்கான சிறப்புத் திட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி விவசாயிகளுக்குப் பெரும் பயன் தரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
​வெளிநாடுகளுக்கு கல்வி மற்றும் மருத்துவத்திற்காக அனுப்பப்படும் பணத்திற்கான ஆதார வரி (TCS) 5%-லிருந்து 2%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது நடுத்தர மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. மேலும், புற்றுநோய் மருந்துகளுக்கான வரி ரத்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
​பெண்களின் தொழில்முனைவுத் திறனை அதிகரிக்க “SHE” திட்டம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் அமையவுள்ள மாணவியர் விடுதிகள் பெண்கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரத்திற்கு வித்திடும்.

​செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம், “மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் ‘வளர்ந்த இந்தியா’ கனவை நனவாக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் ஒரு மக்கள் பட்ஜெட்,” என்று கூறினார்.