July 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஜனநாயகத்தைக் காப்போம் புதுச்சேரியில் நடைபெற்ற ‘இரட்டை சத்தியாக்கிரகம்’ மக்கள் போராட்டம்

புதுச்சேரி, ஜூலை 9:

புதுச்சேரியில் ஜனநாயகம், இந்திய அரசியலமைப்பு மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், ‘ஜனநாயகத்தைக் காப்போம் – இரட்டை சத்தியாக்கிரகம்’ எனும் மாபெரும் அமைதி வழிப் போராட்டம் இன்று நடைபெற்றது. ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் (RGPRS), சங்கம் புதுச்சேரி மற்றும் புதுச்சேரி சக்தி அபியான் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தன.

இன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை, புதுச்சேரி மேற்கு மாவட்டம், பத்துக்கண்ணு – கூடைப்பாக்கம் சந்திப்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆர்.ஜி.பி.ஆர்.எஸ் (RGPRS) தேசியத் தலைவர் டாக்டர் அனில் பன்வார், புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் திரு. வ. வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதலமைச்சர் திரு. வி. நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் திரு. பி. கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். மேலும், கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு நிலை நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள், மத்திய பிரதேச மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் செல்வி மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைமுறைகளை உறுதி செய்தல், தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படுதல், நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுத்தல், பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம சபை அதிகாரங்களைப் பாதுகாத்தல், MGNREGA திட்டத்தை வலுப்படுத்துதல் மற்றும் அயோத்தி ராமர் கோவில் காணிக்கை விவகாரத்தில் முழுமையான எஸ்.ஐ.டி. (SIT) விசாரணை அறிக்கையை வெளியிடுதல் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இது வெறும் கட்சிப் போராட்டம் மட்டுமல்ல, மகாத்மா காந்தியின் வழியில் நடக்கும் தேசிய அளவிலான ஜனநாயகக் காப்பு இயக்கம் என்று குறிப்பிட்ட அமைப்பாளர்கள், அரசியலமைப்பைப் பாதுகாக்க மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.