July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஊழியர் நிலுவைச் சம்பளத்தை வழங்கக் கோரி உழவர்கரை நகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 7-வது ஊதியக் குழு நிலுவைச் சம்பளத்தை முழுமையாக வழங்கக் கோரி, இன்று நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு அறிவித்த 7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி, கடந்த 01-01-2016 முதல் 02-10-2018 வரையிலான 33 மாதங்களுக்கான நிலுவைச் சம்பளத்தை, அந்தந்த நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளின் சொந்த நிதியிலிருந்து வழங்க வேண்டும் என கடந்த 30-11-2025 அன்று புதுச்சேரி அரசு உள்ளாட்சித் துறை உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையிலும், மற்ற பல நகராட்சிகளில் நிலுவைத் தொகை வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், உழவர்கரை நகராட்சி நிர்வாகம் போதிய நிதி இல்லை என்ற காரணத்தைக் கூறி நிலுவைத் தொகையை வழங்காமல் இழுத்தடித்து வருவதாகவும், தற்பொழுது 20 அல்லது 25 சதவீதம் மட்டுமே வழங்குவதாகக் கூறி பேரம் பேசுவதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய சங்க நிர்வாகிகள், “நகராட்சியில் உதவி ஆணையர், செயற்பொறியாளர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு தகுதியான அதிகாரிகளை நியமிப்பதற்குப் பதிலாக, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநபர்களை ‘இறவல் பணியாளர்களாக’ அமர்த்தி நிர்வாகம் செயல்படுகிறது. இதனால் நகராட்சிக்கு வரவேண்டிய வரி வருவாய் உள்ளிட்ட நிதிகள் முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை,” என்று தெரிவித்தனர்.

மேலும், “நகராட்சியின் சொந்த சேமிப்பு நிதியிலிருந்து உரிய அனுமதி பெற்று நிலுவைச் சம்பளத்தை வழங்க முடியும் என்ற சூழலில், நிதி இல்லை எனக் கூறி ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதை ஏற்க முடியாது. எனவே, நிலுவைத் தொகையை ஒரே தவணையில் உடனடியாக வழங்க வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான ஊழியர்களும் ஓய்வூதியர்களும் கலந்துகொண்டு, அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முழக்கங்களை எழுப்பினர்.