சேலத்தில் முதல்வர் விஜயை வெளுத்தெடுத்த ஈபிஎஸ் – தலைகால் புரியாமல் ஆடுவதா? பதவி வந்ததும் பணிவு வரணும்.
பதவி வந்தவுடன் தலைகால் தெரியாமல் ஆடுகின்றனர்.பதவி வரும் போது பணிவு வரவேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேசும்போது கூறியதாவது:
’’சேலம் மாவட்டத்தில் 7 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் அதிக இடங்களில் அதிமுக வெற்றி பெற்ற மாவட்டம் சேலம். சேலம் அதிமுகவின் கோட்டை என நிரூபித்துள்ளோம். அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றோம். இதற்கு காரணமாக வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
வெற்றி தோல்வி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப அமையும். அதிமுக கூட்டணி ஒரு கோடியே 45 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. 1996-ல் வெறும் நான்கு இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இப்போது 47 இடங்களில் வென்றிருக்கிறோம். மீண்டும் ஆட்சிக்கு வருவோம். 2021-ல் 75 இடங்களில் வென்றோம். 2 லட்சம் வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று திமுக ஆட்சியமைத்தது. இடைத் தேர்தலாக இருந்தாலும், பொதுத் தேர்தலாக இருந்தாலும் அதிமுக மீண்டும் வென்று ஆட்சியமைக்கும்.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இதை நாம் சொல்லவில்லை. முதலமைச்சராக ஆவதற்கு உதவிய கூட்டணி கட்சித் தலைவர்கள் இதை சொல்லுகிறார்கள். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி மோசமாக இருக்கிறதோ அதைப்போலவே தவெக ஆட்சியிலும் தொடர்கிறது. அதை தடுத்து நிறுத்த தவெக அரசால் முடியவில்லை. திருச்சி கிழக்கு தொகுதியில் நன்றி சொன்னபோது, முதலமைச்சர் தீர்ந்து போன கட்சி என பேசியுள்ளார்.
அதிமுக நாட்டு மக்களின் கோரிக்கைகளை தீர்த்து வைத்த கட்சி என முதலமைச்சர் உணர வேண்டும். பதவி வந்தவுடன் தலைகால் தெரியாமல் ஆடுகின்றனர். பதவி வரும் போது பணிவு வரவேண்டும். அதிமுக 31 ஆண்டு காலம் ஆட்சி புரிந்துள்ளது. பொன்விழா கண்ட கட்சி. இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ அதிமுக ஆட்சி நடைபெற்றதே காரணம்.
திரைப்படத்தில் நடித்ததால் வெற்றி
கட்சி ஆரம்பித்து 3 வருடத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள். எந்த இடத்தில் வாக்குகளை கேட்டாலும், அங்கு அதிமுக ஆட்சியில் என்ன செய்திருக்கிறோம் என சொல்லி வாக்கு கேட்டோம். விஜய் திரைப்படத்தில் நடித்ததால் வெற்றி பெற்றிருக்கிறார். சேவை செய்ததால் அல்ல. திமுக கிடப்பில் போட்டுள்ள மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை தவெக அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.
தவெக அமைச்சரவையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் பேசுகிறார். அவர் பல கட்சியில் இருந்தவர். திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது தவெகவில் இருக்கிறார். அடுத்து வேறு எந்த கட்சியில் இருப்பார் எனத் தெரியவில்லை. ஆனால், நான் அதிமுகவில் தொடர்ந்து 51 ஆண்டுகளாக இருக்கிறேன். மக்களுக்காக பணியாற்றி வருகிறேன். இதை மனதில் வைத்துக் கொண்டு பேச வேண்டும்’’.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

More Stories
மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா தலைமையில்புதுச்சேரி மாநில திமுக மாணவரணிநிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்