சேலத்தில் இ.பி.எஸ்.-க்கு கனிமொழி கடும் கண்டனம் – கோவிட் காலத்தில் முதல்வர் இல்லாமல் போயிருப்பார் எனப் பேசுவதா.
தேர்தல் பயத்தில் எடப்பாடி பழனிசாமி மிகக் கேவலமான நிலைக்கு இறங்கிப் பேசுகிறார்”என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி சாடியுள்ளார்.
நேற்று சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் லோகநாதனை ஆதரித்து, சேலம் காந்தி மைதானம் அருகே நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கனிமொழி கலந்துகொண்டார். அப்போது உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்துப் பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அண்மைக்கால பேச்சுகளைக் கடுமையாக விமர்சித்தார்.
பிரசாரத்தில் கனிமொழி பேசியதாவது:
“தி.நகரில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘கோவிட் காலத்தில் முதலமைச்சர் (மு.க. ஸ்டாலின்) இல்லாமல் போயிருப்பார்’ என்று பேசியிருக்கிறார். பழனிசாமி அவர்களே, இது ஒரு தேர்தல்தானே? ஒரு தேர்தலுக்காகத் தமிழ்நாட்டின் முதலமைச்சரை, ஒரு மனிதனைப் பார்த்து ‘நீ கொரோனாவில் இறந்திருப்பாய்’ என்று சொல்லும் அளவுக்கு எப்படிக் கேவலமாக இறங்கினீர்கள்? உங்களை நினைத்து நான் அவமானப்படுகிறேன்.
எங்கள் பரம்பரைக்கு ஒரு சரித்திரம் இருக்கிறது. எங்களை எதிர்த்தவர்களுக்கு மலர் வளையம் வைத்தவர்கள் நாங்கள். முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினைப் பற்றிப் பேசும்போது தெரிந்து பேசுங்கள். இப்படிப் பேசுபவருக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் தகுதிகூட இல்லை” என்றார்.
எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்துப் பேசிய கனிமொழி, ‘டெல்லியில் இருப்பவர்கள் தமிழ்நாட்டிற்கு நிதி தருவதில்லை. இந்தி படித்தால்தான் நிதி என்பவர்களோடும், சிறுபான்மையினர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வந்த பிஜேபியோடுதான் இப்போதும் எடப்பாடி கைகோர்த்துள்ளார். அதிமுக இன்று ‘அமித்ஷா திமுக’ ஆகிவிட்டது. கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு, இங்கு வந்து கீழ்த்தரமாகப் பேசுகிறார்.
தமிழ்நாட்டிற்கும், தன்னை வளர்த்த கட்சிக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி. அதனால்தான் ஓ.பி.எஸ் இன்று எங்களோடு (திமுக கூட்டணி) இணைந்துள்ளார். யாரால் முதலமைச்சர் ஆனாரோ, அந்த ஜெயலலிதாவுக்கே இன்று அதிமுகவில் இடமில்லை’ என்று சாடினார்.
கோவிட் காலத்தைப் பற்றிப் பேசிய கனிமொழி, “அதிமுக ஆட்சியில் இருந்தபோது மக்களைக் காப்பாற்றவில்லை. ஆனால், திமுக உடன்பிறப்புகள் அதிமுகவினரின் கதவுகளைக் கூடத் தட்டி உதவி செய்தார்கள்” என்றார். மேலும், சேலம் தெற்கு தொகுதிக்காகச் செய்யப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டார்:
ரூ.42 கோடி மதிப்பீட்டில் அம்மாபேட்டை அரசு புறநகர் மருத்துவமனை.
ரூ.146 கோடி மதிப்பீட்டில் அம்மாபேட்டை மேம்பாலம்.
கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு 10% ஊதிய உயர்வு.
திருமணிமுத்தாறு தூய்மைத் திட்டத்திற்காக ரூ.540 கோடி ஒதுக்கீடு.
“மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய பெருமிதத்தோடு நாங்கள் வாக்குக் கேட்கிறோம். இந்தத் தேர்தலோடு மக்கள் எடப்பாடி பழனிசாமியை மறந்துவிடுவார்கள்” என்று கனிமொழி உறுதிபடத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், எம்.பி.க்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம், செல்வகணபதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!