செஞ்சி, ஜூலை 9:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்திற்குட்பட்ட ஓதியத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய சொணை மலையில் 12–13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பொத்தப்பி சோழர் கால கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியரும், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவருமான முனைவர் எ. சுதாகர், தமிழ்த்துறை மூன்றாமாண்டு மாணவர்கள் பிரகாஷ், ப. பிரகாஷ், பிரவீன் ஆகியோருடன் மேற்கொண்ட கள ஆய்வில், 12 வரிகள் கொண்ட இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
ஆய்வில், இக்கல்வெட்டு பிற்காலச் சோழர்களில் பொத்தப்பி சோழன் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது. கல்வெட்டின் முதல் இரண்டு வரிகளில் “பல்லவ வாணராய பொண் வீர சதப நாயக்கரான வானராயன் மகன் பொத்தப்பி சோழன்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் அக்காலத்தில் செஞ்சி பகுதி பொத்தப்பி சோழர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது தெரியவருகிறது.
மூன்றாவது வரியில் “பேரழகி வெட்டினான்” என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளதால், அங்குள்ள சொணையை பேரழகன் என்பவர் வெட்டியதாக ஆய்வாளர்கள் விளக்குகின்றனர். மேலும், கல்வெட்டின் இடதுபுறத்தில் குதிரை மீது வாளுடன் அமர்ந்திருக்கும் வீரப்பெண், அருகில் யானையின் தலை, மேலே சங்கு மற்றும் சக்கரம் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன. இது வீரப்பெண் ஒருவர் போரில் யானையின் தலையை வெட்டிய நிகழ்வை நினைவுகூரும் ஓவியமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
மலை அடிவாரத்தில் பிடாரி அம்மன் கோயில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த அரிய வரலாற்றுச் சின்னத்தை தமிழக அரசு தொல்லியல் துறை உரிய முறையில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வுக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்