July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தனியார் கம்பெனியில் ரூ.37.5 லட்சம் மதிப்பிலான பிவிசி மூலப்பொருள் திருட்டு: ஸ்டோர் மேனேஜர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!

கோவை: ஜூன்-06

விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் நிறுவனமான பாலி பைப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சுமார் 15 வருடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 37.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிவிசி மூலப்பொருட்களைத் திருடி கோவையில் உள்ள பைப் மாஸ்டர் என்ற மற்றொரு நிறுவனத்திற்கு கள்ளச்சந்தையில் விற்றுவிட்டு, கணக்கு புத்தகங்கள் மற்றும் சிசிடிவி ஹார்டு டிஸ்க்குடன் தலைமறைவான ஸ்டோர் மேனேஜர் முருகானந்தம் (34) என்பவரை போலீசார் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் பாலி பைப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாளர் அளித்த புகாரில் போலீஸ் தரப்பில் முதல் தகவல் அறிக்கையில் கூறப்படுவதாவது:
கோவை விளாங்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் ‘பாலி பைப்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்திற்கு சென்னையைச் சேர்ந்த வினய்கிராவத் என்பவர் வெளிநாடுகளில் இருந்து பிவிசி ரெசின் மற்றும் சுண்ணாம்பு உள்ளிட்ட மூலப்பொருட்களை இறக்குமதி செய்து வருகிறார். இந்த மூலப்பொருட்கள் விளாங்குறிச்சி ரத்தினகிரி நகரில் உள்ள குடோனில் வைக்கப்பட்டு, அங்கிருந்து பல்வேறு நிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது.

தணிக்கையில் அம்பலமான மோசடி:
இந்த குடோனில் பாலி பைப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஸ்டோர் மேனேஜர் திருச்சி தொட்டியத்தைச் சேர்ந்த முருகானந்தம் (34) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஸ்டோர் மற்றும் டிரான்ஸ்போர்ட் மேனேஜராகப் பணியாற்றி வந்தார். இவர் மூலப்பொருட்களை விநியோகம் செய்ய தனக்குச் சொந்தமான இரண்டு சரக்கு வாகனங்களைப் பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2026 பிப்ரவரி 21-ம் தேதி நிறுவனத்தின் வருடாந்திர கணக்கு தணிக்கை (Audit) நடைபெற்றது. அப்போது குடோனில் இருந்த இருப்பைச் சரிபார்த்தபோது, கம்பெனிக்குச் சொந்தமான சுமார் 52.500 டன் பிவிசி ரெசின் மூலப்பொருட்கள் குறைவாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 37.5 லட்சம் ரூபாய் ஆகும்.

ஹார்டு டிஸ்க்குடன் மேனேஜர் முருகானந்தம் தலைமறைவு:
தணிக்கை நடப்பதற்கு முந்தைய நாள் முதலே ஸ்டோர் மேனேஜர் முருகானந்தம் பணிக்கு வராமல் தலைமறைவாகியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கம்பெனி நிர்வாகம், குடோனில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தது. அதில், கடந்த பிப்ரவரி 20-ம் தேதி மதியம் முருகானந்தம் கம்பெனிக்குத் தெரியாமல் வரவு-செலவு கணக்கு புத்தகங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் சிசிடிவி பதிவுகள் அடங்கிய ‘ஹார்டு டிஸ்க்’ (Hard Disc) ஆகியவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், முறையான ஆவணங்கள் இன்றி நிறுவனத்தின் மூலப்பொருட்களைத் தனது சொந்த வாகனங்களில் ஏற்றிச் சென்று, கள்ளச்சந்தையில் விற்றுப் பணத்தைச் சுருட்டியதும் அம்பலமானது.

போலீசார் விசாரணை:
இதுகுறித்து கம்பெனி மேலாளர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், நிறுவனத்திற்குத் தெரியாமல் 37.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களைத் திருடி மோசடி செய்த ஸ்டோர் மேனேஜர் முருகானந்தம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் திருடப்பட்ட பிவிசி மூலப்பொருட்களை கோவையில் உள்ள பைப் மாஸ்டர் என்ற மற்றொரு நிறுவனத்திற்கு கள்ளச்சந்தையில் விற்றதை அடுத்து அந்நிறுவனத்தை நிர்வகித்து வந்த விக்ரம் சிங்கை போலீசார் கைது செய்தனர்.