July 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வாரிசு சான்றிதழுக்கு ரூ.4,000 லஞ்சம்: மணப்பாறை அருகே முதுநிலை வருவாய் ஆய்வாளர் கையும் களவுமாக கைது

மணப்பாறை, ஜூலை 21:

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்திற்குட்பட்ட வி.பெரியப்பட்டி பிர்கா முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஹேமலதா, வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.4,000 லஞ்சம் பெற்றபோது, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை (DVAC) அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், பாம்பாட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஈஸ்வரி (30) என்பவரின் தந்தை கருப்பசாமி சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக அவர் அரசு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்திருந்தார்.

இந்த மனு தொடர்பாக வி.பெரியப்பட்டி பிர்கா முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஹேமலதாவை அணுகியபோது, மனுவை விரைந்து பரிசீலித்து சான்றிதழ் வழங்குவதற்காக முதலில் ரூ.5,000 லஞ்சம் கோரியதாக கூறப்படுகிறது. பின்னர், புகார்தாரரின் வேண்டுகோளின் பேரில் ரூ.4,000 ஆக குறைத்து கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் வழங்க விருப்பமில்லாத திருமதி ஈஸ்வரி, கடந்த ஜூலை 20 ஆம் தேதி திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். புகாரை ஆய்வு செய்த அதிகாரிகள், வழக்குப்பதிவு செய்து, லஞ்ச ஒழிப்பு பொறிவைப்பு நடவடிக்கைக்கு திட்டமிட்டனர்.

அதன்படி, இன்று (ஜூலை 21) திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் பிரசன்ன வெங்கடேஷ், சேவியர் ராணி மற்றும் தனிப்படை அதிகாரிகள் இணைந்து வி.பெரியப்பட்டி பிர்கா அலுவலகத்தில் பொறிவைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது, புகார்தாரரிடம் இருந்து ரூ.4,000 லஞ்சத் தொகையை ஹேமலதா பெற்றுக்கொண்ட உடனேயே, அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். லஞ்சமாக பெறப்பட்ட பணமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மணப்பாறை வட்டம் வி.பெரியப்பட்டி பிர்கா அலுவலகத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஹேமலதாவிடம் விசாரணை நடத்தப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் வருவாய்த் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசு அலுவலகங்களில் லஞ்சம் கோரும் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.