திமுக–வுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது
திமுக தொண்டர்களுக்கு உற்சாகமூட்டி அமைப்பாளர் இரா. சிவா பேச்சு !
புதுச்சேரி திமுக செயற்குழு கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநில அமைப்பாளர் சிவா பேசும்போது,
ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி சகஜம். அதனால் இந்த இயக்கத்தை யாராலும் முடக்கிவிட முடியாது. தமிழகத்தில் அற்புதமான ஆட்சியை நமது தலைவர் கொடுத்தார். இந்தியாவுக்கே முன்மாதிரி முதல்வர் என்றார்கள். மக்களை தேடித்தேடி சென்று திட்டங்களை கொண்டு வந்தார்.
இல்லாதவர்களுக்கு இல்லம் தேடி மருத்துவ உதவி, ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட திட்டங்கள் சென்று சேர்ந்தது. ஒரு குடும்பம் கூட பயன்பெறவில்லை என்று சொல்லும் நிலைமை தமிழகத்தில் இல்லை. மிகச்சிறந்த ஆட்சி. நம்முடைய கொள்கை, இனம், மொழி, உணர்வுகளில் உறுதியாக இருந்த ஆட்சி. எந்த காரணத்துக்கும் மத்திய அரசுக்கு பணியாத ஆட்சி. இந்தியா முழுவதும் அதிர்ந்த தலைவராக நமது தலைவரை பார்த்தார்கள். சிறந்த ஆட்சியை கொடுத்தும் தோல்வியை தழுவி உள்ளோம். புதுச்சேரியில் நாம் ஆட்சிக்கு வருவோம் என்ற நல்ல சூழல் இருந்தது.
15 இடங்கள் கொடுத்தால் கூட்டணிக்கு நாம் தலைமை தாங்குவோம் என்று சொன்னோம். நம்முடைய தலைமை என்ன வழிகாட்டியதோ அதன்படிதான் நாம் சென்றோம். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் நாம் ஒரு சீட் கூட தேரமாட்டோம் என முன்கூட்டியே முடிவு செய்துவிட்டனர். இந்த கூட்டணியை தவிர்த்தனர். வேறு இடத்தில் கூட்டணி சேர வேகமாக இறங்கினார்கள். அப்படி இருந்தும் நம்முடைய தலைமை அதனை சரி செய்தனர். நமக்கு 13 இடங்களை கொடுத்துவிட்டு அவர்கள் 17 இடங்களை எடுத்துக்கொண்டனர். எல்லாவற்றையும் செய்தபிறகும் கூட தேர்தல் நெருக்கத்தில் தலைமை ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறி 8 இடங்கள் மட்டுமே கொடுப்போம், மீதமுள்ள இடங்களில் நாங்கள் தான் போட்டியிடுவோம் என்றார்கள். அதற்கு நம்முடைய தலைமை கோபமுற்றது. ஆனாலும் அவர்கள் வேறொரு காரணத்தால் நம்மைவிட்டு பிரிந்து செல்ல முயற்சித்தார்கள் என்பதை புரிந்துகொண்டு நம்முடைய தலைமை பொருத்திருக்கும்படி கூறியது. நம்முடைய தலைவர்கள் பலரும் பேசினர். ஆனால் அவர்கள் ஒருமுடிவை தெளிவாக எடுத்துவிட்ட காரணத்தால் கொஞ்சம் கூட பின்வாங்காமல் கடைசி வரை 6 போட்டி வேட்பாளர்களை நிறுத்தனர். இவ்வளவும் நடந்தும் நாம் தொடர்ந்து முயற்சி எடுத்தோம் ஆனால் நம்மை பின்னடைய செய்தனர்.
இந்தாலும் நம்முடைய தலைமை தமிழக அரசியலை முன்னிறுத்தி இதுவொரு பிரச்சனையாக இருக்கக்கூடாது என்று கூறி வெற்றிபெறும் வேலையை பாருங்கள் என்று கூறி அனுப்பிவிட்டனர். 15 நாட்களில் வேறு எந்தவேலையையும் பார்க்க முடியவில்லை. கூட்டணி பேசுவதிலேயே நாட்கள் ஓடியதால் மிகப்பெரிய சிரமங்களை எல்லாம் சந்தித்தோம். நான் என்னுடைய தொகுதியை கோட்டைவிட காரணம் அங்கு கவனம் செலுத்தாமல் கூட்டணி வேலையை பார்த்தது தான். இது மிகப்பெரிய அளவில் நமக்கு பாதிப்பு என்று அவர்கள் நினைத்தார்கள்.
ஆனால் அவர்கள் போட்டி வேட்பாளர்களை நிறுத்திய தொகுதிகளில் எல்லாம் நாம் தான் வெற்றி பெற்றோம். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் 11 தொகுதிகளில் டெபாசிட் போனது இந்த தேர்தல் தான். நமக்கு கேடு செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். வரலாறு மிக்க கட்சியின் தலைமை சரியான முடிவெடுக்காமல் ஜனநாயகத்தில் மிகப்பெரிய மோசடி செய்தார்கள். கூட்டணிக்கு இப்படிப்பட்ட தர்ம சங்கடத்தை யாரும் செய்ய மாட்டர்கள். மிகப்பெரிய மோசடியை செய்து அவர்கள் தோல்வி அடைந்தனர். திமுக–வுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ் இன்று காணாமல் போய்விட்டது. ஆனால் நாம் 5 தொகுதிளில் வெற்றி பெற்றுள்ளோம். திமுக ஆட்சி இருந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் தொடர்ந்து இந்த இயக்கத்தின் மீதும், நமது தலைவர் மீதும், உழைப்பின் மீதும் நம்பிக்கை கொண்டு புதுச்சேரி மக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
வாக்கு சதவீதத்தை வைத்து பார்த்தால் 13 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் 3வது பெரிய கட்சியாக இருக்கின்றோம். என்.ஆர்.காங்கிரஸ் சிறந்த ஆட்சி, சிறந்த முதல்வர் என்றெல்லாம் வாக்களிக்கவில்லை. அவர்கள் ஆட்சியை பிடிக்க காரணமாக இருந்த வைத்திலிங்கம், நாராயணசாமி, காங்கிரஸ் கட்சிக்கு நன்றி சொல்ல வேண்டும். நம்முடைய கூட்டணி கட்சிகள் திமுக தலைமையை ஏற்றுக்கொள்கிறோம் என்று வந்தனர். ஆனால் காங்கிரஸ் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றார்கள். ஆனால் அவர்கள் செய்யவில்லை. அதனால் ஏற்பட்ட மோசமான அரசியல் சூழலை கொண்டு நாம் தேர்தலை சந்தித்தோம். நம்மை பொறுத்தவரை 5 நட்சத்திரமாக எம்எல்ஏக்கள் கிடைத்துள்ளனர். திமுகவின் குரல் சட்டப்பேரவையில் எதிரொலிக்கும். எதிர்கட்சியாக நாம் தான் இருக்கின்றோம். ஆனாலும் நம்முடைய கட்சி நிர்வாகிகளின் கடின உழைப்பால் நாம் வெற்றி பெற்றுள்ளோம். தோல்வியடைந்தவர்களும் பெரிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் தோற்கவில்லை.
நாம் இம்முறை தோற்கவில்லை என்பது தான் உண்மை. ஒரு விசில் வந்தது. அந்த விசில் மக்களிடம் ஒரு மாயையை உண்டாக்கி வந்தது. அதனை நம்மால் கணிக்க முடியவில்லை. வாட்ஸ்அப் குழுவை கொண்டு வந்து பொய் பிரச்சாரம் மூலம் சினிமா மாயையை முன்னிறுத்தி வெற்றி பெற்றுவிட்டனர். அவர்களின் ஆட்சி 10 நாட்களில் தெரிந்துவிட்டது. எதிர்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற முதல் நாளிலேயே திமுக எப்படிப்பட்ட கட்சி என்பதை அவர் காட்டிவிட்டார். சோர்ந்திருந்த கட்சிகாரர்கள் அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டனர். எதிர்காலத்தில் நம்முடைய இயக்கத்தை நடத்த ஒரு தலைவன் கிடைத்துவிட்டான் என்று. இது ஒரு மாயை. புதுச்சேரியில் தவெகவுக்கு 1.35 லட்சம் வாக்கு போட்டுள்ளனர். மாயையால் போட்டுவிட்டனர். புதுச்சேரியில் நாம் தோல்வியடைய காரணம் விசில் தான். என்னுடைய தோல்வியை என்னால் ஏற்க முடியவில்லை. முன்மாதிரியான தொகுதியாக வைத்திருந்தேன்.
தமிழகத்தின் முன்மாதிரி, இந்தியாவுக்கே வழிகாட்டி, பாஜகவுக்கு சிம்மசொப்பனமாக இருப்பவர் அவரையே மக்கள் தோற்கடித்தனர். நாம் எந்த மூலை என்ற ஆறுதலில் நாம் இருக்கின்றோம். அதனால் ஏற்ற இறக்கங்களை பார்த்த கட்சிதான் நம்முடைய கட்சி தோல்வியை கண்டு துவண்டுபோவதில்லை. 75 ஆண்டுகாலமாக தொடர்ந்து ஜனநாயகத்தில் பயணிக்கும் கட்சி. எதிர்வரும் காலம் திமுக கையிள் இருக்கிறது என்பதை திமுக தொண்டர்கள் மனதில் உறுதியேற்று தொடர்ந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு பேசினார்.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.