April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மார்ச் 24: 💥💥✍️✍️ புதுச்சேரியில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும், உள்ளாட்சி தேர்தலை நடத்தவும், மாநில அந்தஸ்தை பெறவும், புதுச்சேரியின் உரிமைகளை பாதுகாக்கவும், சுத்தமான அரசியலை உருவாக்க வேண்டி புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் வருகின்ற 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்துள்ளது.

இது குறித்து கட்சியின் தலைவர் பேராசிரியர் மு. ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து நான்கு காரணங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.அவை

  1. புதுச்சேரியில் அடித்தட்டு ஜனநாயகம் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் 2011க்கு பிறகு கடந்த 14 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை, ஏதாவது காரணங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தின் மூலம் தேர்தல்கள் மறுக்கப்பட்டுள்ளன மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான 1042 உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளது. இதற்காக எங்கள் கட்சி தொடர்ந்து போராட்டங்களையும் மாநிலம் முழுவதும் பல்வேறு இயக்கங்களையும் நடத்தியுள்ளது. இறுதியாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி உள்ளோம் நீதிமன்றம் எங்கள் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து வழக்கை ஏற்று இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் புதுச்சேரி அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த காலக்கெடு முடிவடையும் முன்பே தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தலை அறிவித்துள்ளது அடித்தட்டு ஜனநாயகம் இல்லாமல் மேல்மட்ட தேர்தல் நடத்துவது ஜனநாயக விரோதம் என்பது எங்கள் நிலைப்பாடு எனவே சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கின்றோம்.
  2. புதுச்சேரி சட்டமன்றம் இன்று அதிகாரம் அற்ற அமைப்பாக உள்ளது 1963 ஆம் ஆண்டு யூனியன் பிரதேச சட்டத்தின் கீழ் அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து ஆளுநர் வழியாக செயல்படுகின்றன. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சர் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் முழுமையான அதிகாரம் இல்லாமல் உள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படுவது மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வாகும் 1987 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 39 ஆண்டுகளாக மாநில அந்தஸ்து கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது சட்டமன்றத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் மத்திய அரசு இதனை ஏற்க மறுத்துள்ளது.
    புதுச்சேரியில் முழுமையான ஜனநாயக மக்களாட்சி இன்னும் உருவாகவில்லை சட்டமன்றம். ஒரு சம்பிரதாய அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது மாநில அந்தஸ்து வழங்க மறுக்கும் மத்திய அரசின் ஜனநாயக விரோத அணுகுமுறைக்கு எதிராக இந்த புறக்கணிப்பு அறிவிக்கப்படுகிறது.
  3. புதுச்சேரியில் தேர்தல் இன்று பணத்தின் போட்டியாக மாறி உள்ளது கொள்கை, லட்சியம், மக்கள் நலன் ஆகியவை பின் தள்ளப்பட்டு பணபலமே வெற்றியை நிர்ணயிக்கும் நிலை உருவாகியுள்ளது. தேர்தல் ஜனநாயகம் வெகுவாக பணநாயகமாக மாறி உள்ளது தேர்தலில் அதிக பணம் செலுத்தும் வேட்பாளரே வெற்றி பெறும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழலில் எங்கள் கட்சி கலந்து கொள்வது எங்கள் கொள்கைக்கு முரணானது மக்கள் பணம் வாங்கி வாக்களிக்கும் பழக்கத்தை நிராகரிக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம் சுத்தமான மற்றும் நேர்மையான அரசியல் நிலை உருவான பின் மட்டுமே தேர்தலில் பங்கேற்போம்.
  4. புதுச்சேரி குடியுரிமை ஆணை 1962ன் அடிப்படையில் 1962 க்கு முன்னர் புதுச்சேரியுடன் தொடர்புடையவர்களே இங்கு பிறந்தவர்கள் பெற்றோர் இங்கு பிறந்தவர்கள் அல்லது அந்நாளுக்கு முன்பே இங்கு வசித்தவர்கள் புதுச்சேரியின் குடிமக்களாக கருதப்பட வேண்டும் ஆனால் இந்த ஆணையை புறக்கணித்து இந்திய குடிமகன் என்ற பெயரில் பிற மாநிலங்களில் இருந்து வரும் யாரும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் சட்டமன்ற தேர்தல் சமமற்ற போட்டியாக மாறி உள்ளது உள்ளூர்வாசிகளுக்கும் வெளியூர் நபர்களுக்கும் இடையிலான போட்டியாக இது உருவாகி வருகிறது. இந்நிலைத் தொடர்ந்தால் எதிர்காலத்தில் புதுச்சேரியை சாராத 30 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியை கைப்பற்றும் அபாயம் உள்ளது. இது புதுச்சேரியின் தனித்துவ அரசியல் உரிமைகளை பாதிக்கும் செயலாகும் புதுச்சேரி குடியுரிமை ஆணை முறையாக அமல்படுத்தப்படும் வரை இந்த தேர்தலில் பங்கேற்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த நான்கு முக்கிய காரணங்களின் அடிப்படையில் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கிறது ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும், உள்ளாட்சி தேர்தலை நடத்தவும், மாநில அந்தஸ்தை பெறவும், புதுச்சேரியின் உரிமைகளை பாதுகாக்கவும், சுத்தமான அரசியலை உருவாக்கவும், எங்கள் போராட்டம் தொடரும் தேர்தலில் கலந்து கொள்வது எங்கள் நோக்கங்களில் ஒன்றாக இருந்தாலும் தேர்தலுக்கு அப்பாற்பட்டு மக்களின் நலனுக்காக நல்ல செயல்களை எங்கள் கட்சி தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதை இந்த நேரத்தில் பொதுமக்களுக்கு அறிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார். இந்த பேட்டியின் போது கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.மு.ராஜன், துணைத் தலைவர் நித்தியானந்தம், மாநில செயலாளர்கள் ரவிக்குமார், தனஜெயன், தொகுதி பொறுப்பாளர் காலாப்பட்டு குமார் இளைஞர் அணி அபிலாஷ், ஆதிதிராவிடர் அணி தலைவர் முருகையன், மீனவர் அணி ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Facebook
YouTube
Instagram
WhatsApp