புதுச்சேரி:
புதுச்சேரியில் ஊழலற்ற, நேர்மையான மற்றும் மக்களுக்கான ஆட்சி அமைய கழகத் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என ஆர்.எல்.வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் ஆர்.எல். வெங்கட்ராமன் அழைப்பு விடுத்துள்ளார்.
2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, ஆர்.எல்.வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கியப் பிரமுகர் சிவகுமரன் தலைமையில் கழகத் தொண்டர்கள், மாநிலத் தலைவர் ஆர்.எல். வெங்கட்ராமன் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்தச் சந்திப்பின் போது வெங்கட்ராமனுக்கு சால்வை அணிவித்து, இனிப்புகள் மற்றும் பழங்கள் வழங்கி தொண்டர்கள் உற்சாகமாக வாழ்த்துத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, சிவகுமரன் தனது சொந்த செலவில் கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் தினசரி காலண்டர்களை வழங்கினார். வாழ்த்து தெரிவிக்க வந்த தொண்டர்களுக்கு வெங்கட்ராமன் கட்சித் துண்டு அணிவித்து, இனிப்புகளை வழங்கி தனது புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
பின்னர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய ஆர்.எல். வெங்கட்ராமன் பேசியதாவது:
புதுச்சேரி மக்களின் முன்னேற்றத்திற்காகவே ‘ஆர்.எல்.வி மக்கள் முன்னேற்றக் கழகம்’ எனும் புதிய கட்சி உதயமாகியுள்ளது. இந்தக் கட்சியின் நோக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மிகக் குறுகிய காலமே உள்ளதால், கழகப் பணிகளைத் தீவிரப்படுத்தி மக்கள் பணியாற்றுவது அவசியம்.
சுதந்திரம் அடைந்து கடந்த 71 ஆண்டுகளில் புதுவையை ஆண்டவர்கள் மக்களுக்கான ஆட்சியை வழங்கியதாக வரலாறு இல்லை.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு உரிமை, முதியோருக்கான பாதுகாப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவை இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
ஊழலை ஒழிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும். இந்த நிலை மாற 2026-ல் ஒரு நேர்மையான ஆட்சி அமைய வேண்டும். அதற்காக நமது கழகம் அயராது பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில் ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர் N. சிவகுமரன் தலைமையில் கோமதி சங்கர், J.சுப்ரமணி, N.R.சிவகுமார், சமூகசேவகி வாசுகி, ராஜேஷ், அருண், பீட்டர், ராம்குமார், சிவகாமி ,அமுதா ஆகியோர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!