ஈசிஆர் கொக்குப்பார்க் சந்திப்பு போக்குவரத்து தடையை நீக்கி
மீண்டும் சீரான போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்
தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வலியுறுத்தல் !
செய்தி அறிக்கை
தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி திமுக பொறுப்பாளரும், மாநில திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளருமான டாக்டர் ரோ. நித்திஷ் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: –
புதுச்சேரி இலாசுப்பேட்டை – காமராஜர் சாலையை விநோபா நகர் வழியாக இணைக்கும் கிழக்கு கடற்கரை சாலை கொக்குபார்க் சந்திப்பில் இதுவரை பயன்பாட்டில் இருந்த பாதையை கடந்த ஒரு வாரமாக பேரிகார்டு மூலம் போலீசார் மூடிவுள்ளனர். தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய சந்திப்பில் எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடியிருப்பது வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டைக்கு செல்லும் தொழிலாளர்கள், குடிமைப் பொருள் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள், தாகூர் அரசு கலைக்கல்லூரி, அரசு பாலிடெக்னிக், அரசு பள்ளிகள் மற்றும் குளூனி, விவேகானந்தா உள்ளிட்ட தனியார் பள்ளிகள், இதயா உள்ளிட்ட தனியார் கல்லூரிகள் என பல்வேறு கல்வி நிலையங்களுக்கு செல்பவர்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வங்கிக்கு செல்பவர்கள் மற்றும் அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு என பல ஆயிரம் பேர் கொக்குபார்க் சந்திப்பு சாலையை பயன்படுத்தி செல்வது தான் வழக்கம்.
ஆனால் கொக்குபார்க் சந்திப்பு சாலையை திடீரென மூடியதால் அவ்வழியை பயன்படுத்திய மக்கள் தற்போது காமராஜர் சாலையில் இருந்து ராஜீவ்காந்தி சிக்னல் வழியாக ஈசிஆர் சாலையை கடந்தும், இலாசுப்பேட்டை, தட்டாஞ்சாவடி பகுதியில் இருந்து வரும் மக்கள் லதா ஸ்டீல் சந்திப்பு, மடுவுப்பேட் சந்திப்பு வழியாகவும் சுற்றிவரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நேரவிரயம் அதிகமாவதுடன், போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் வெய்யிலில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஏற்கனவே சென்னையிலிருந்து ஈசிஆர் சாலையில் ராஜீவ்காந்தி, இந்திரா காந்தி சதுக்கங்களைத் தாண்டி கடலூர் சாலைக்கு செல்வதே வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சவாலாக உள்ளது. மேலும் ஜிப்மர் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தினந்தோறும் அலறுவதையும் பார்க்க முடிகிறது. இதுபோன்ற முக்கிய சந்திப்புகளை அடைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்து உள்ளூர் பயணிகளும், விடுமுறை நாட்களில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளும் பெரும் இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது என்பதை காவல் துறையும், அரசும் உணர வேண்டும்.
ஆகவே, திடீரென்று போக்குவரத்துக் காவல் துறையின் இந்த நடவடிக்கையை உடனடியாக விளக்கிக் கொள்ள வேண்டும். கொக்குபார்க் சந்திப்பில் மீண்டும் பழைய போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும். இத்துடன் கொக்குபார்க் சந்திப்பின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாய் பாலம் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டு தனியார் நிறுவனங்களின் வாகன நிறுத்தமாக பயன்படுத்தப்பட்டு வருவதை மாற்றி அந்த பாலத்தை சீர்செய்து ஈசிஆர் சாலையுடன் விநோபா நகர் வழியாக காமராஜர் சாலையை இணைத்து அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்கின்ற வகையில் ரவுண்டான ஒன்றை உருவாக்குவதற்கு புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்