June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்

புதுச்சேரி, ஜூன் 6-
புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாளையொட்டி திராவிடர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் மறைமலை அடிகள் சாலை சுதேசி மில் அருகே நேற்று இரவு நடந்தது.
இதில் திமுக மாநில அமைப்பாளர் சிவா, எதிர்கட்சி தலைவர் நாஜிம், எம்எல்ஏக்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், விக்னேஷ் மற்றும் திமுக, திக, கம்யூ., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திமுக மாநில அமைப்பாளர் சிவா பேசுகையில், உலகத்தில் வரலாறு படைத்த ஆளுமை மிக்க தலைவர், அரசியல் சாணக்கியர் கலைஞர் கருணாநிதி. நம் கவுரவத்தை இந்தியா அளவில் கொண்டு சென்றவர். புதுவையிலும் தமிழகத்திலும் எல்லாருக்கும் எல்லாம் என்று விதைபோட்டவர் கலைஞர். புதுச்சேரி அரசியலில் தொடர்பு கொண்டவர்.
புதுச்சேரியில் உள்ள அரசு மக்கள் உண்மையா விரும்பி தேர்ந்தெடுத்தார்களா?, இந்த அரசு எப்படி வந்தது என்று மக்களுக்கு தெரியும். கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை ஏற்போம் என்று கூறினோம். அதற்கான பலம் எங்களிடம் இருந்தது. புதுச்சேரியில் சாதாரணமாக 20 சீட் தனியாக நின்றால் வெற்றி பெறும் நிலை இருந்தது. அதன்பின்னர் காங்கிரஸ் 13 சீட் கொடுத்தது. அதனை நாங்கள் வாங்கி கொண்டோம். கூட்டணி கட்சிகளுக்கு சீட் கொடுக்க வில்லை. அடித்துமாயும் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறாது என தொடக்கத்திலே மக்கள் முடிவு செய்து விட்டனர். பிறகு திமுக வேட்பாளர்களை எதிர்த்து 6 காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். திமுக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்று விடக்கூடாது இவர்கள் கீழ் நாம் ஆட்சியில் இருக்க கூடாது என நினைத்தார்கள். ஆனாலும் காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழந்தது. இங்கு பாஜக ஆட்சி வருவதற்கு ஆர்எஸ்எஸ் கை கூலியாக இருந்து செயல்பட்டு உள்ளார்கள். இன்றைக்கு பாஜக ஆட்சி வந்ததற்கு காங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும். காங்கிரஸ் இல்லாமல் 4 தொகுதிகளில் நாங்கள் வென்றுள்ளோம். புதுவையில் வில்லியனூர் தொகுதியில் மிக அதிக தொகை செலவு செய்துள்ளேன். அங்கு பாஜக, என்.ஆர். அதிமுக அனைவரும் ஒன்று இணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்தினார்கள். அவர் இன்றைக்கு வெற்றி பெற்றுள்ளார். அதற்கு காரணம் புதுவை, தமிழகத்தில் அடித்த விசில் தான். எதற்கு அந்த விசில் அடித்தது, ஏன் அடித்தது, மக்கள் எப்படி மயங்கினார்கள் என்பது இப்போது வெளி வருகிறது. இந்த சத்தம் எப்போது அடங்கும், தமிழக மக்கள் மத்தியில் அவர்களின் சொந்த திறமைகள் வெளி வந்து கொண்டு இருக்கிறது. ஓட்டுப்போட்ட மக்கள் சங்கடப்படும் நிலைமை இருந்து கொண்டு இருக்கிறது. ரங்கசாமிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் இது. அவர் ஆட்சி அமைக்க வேண்டும். ஆனால் அவர் சொந்த சொத்தை தனது பிள்ளைக்கு எழுதுவது போல் காத்திருக்கிறார். ஒரு மாதம் கடந்துவிட்டது. அரசு ஸ்தம்பித்து போய் உள்ளது. கொடுத்த 2 அமைச்சர்களுக்கும் இலாகா கொடுக்கவில்லை. 7ம் தேதி பதவியேற்கும் அமைச்சர்களுக்காவது இலாகா கொடுப்பார்களா? என தெரியாது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் யாரும் கேள்வி கேட்காத அரசாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் ஏமாந்து விட்டோம். எம்.பி தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார்கள் அதுபோல் இந்த தேர்தலில் சந்தித்து இருக்க வேண்டும். இங்கு நடந்த குழப்பத்தில் அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டனர். இவர்கள் எந்த புது திட்டத்தையும் கொண்டு வரபோவதில்லை. தொடர்ந்து இந்த அரசு புரோக்கர் அராசாக இருக்க கூடாது. புரோக்கர் கூட்டம் முதல்வரை சுற்றி உள்ளது. 6 பேர் கொண்ட குழு முதல்வரை ஆட்டி படைக்கிறது. முதல்வர் இந்த புரோக்கர் கூட்டத்தை தவிர்த்து நல்லாட்சி செய்தால் புதுவை வரலாறில் இடம் பெறுவார். முதல்வர் நிவாரண நிதியை அவருடைய தனிசெயலர் ரூ.10 கோடி மோசடி செய்துவிட்டார். அதன் லிஸ்ட் உள்ளது. இதில் ஊழல் செய்துள்ளவர்கள் யார் என்பது முதல்வருக்கு தெரியும். முதல்வர் நல்லவர்போல் நடிக்காமல் ஏழைகளுக்கு சேர வேண்டிய பணத்தை அவர்களுக்கு கொடுத்தால் நீங்கள் நேர்மையானவர் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.