நாள்: 06.09.2026
புதுச்சேரியில் பிரெஞ்சு பாடமொழி நீக்கம்: மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக அரசை கண்டிக்கிறோம். முதலமைச்சர் உடனடியாக உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்!
புதுச்சேரியின் கல்வி அடையாளமாக திகழும் பிரெஞ்சு பாடமொழியை மும்மொழி கொள்கை என்ற பெயரில் நீக்கிய மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக, மாணவர்கள், பெற்றோர்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக எதிர்பு தெரிவித்து வரும் நிலையில், புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு மௌனம் காத்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
புதுச்சேரி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பிரெஞ்சு பாடமொழி நீக்கத்திற்கு எதிராக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக அறிவித்து பல நாட்கள் ஆகியும், இன்று வரை எந்த ஒரு இறுதி முடிவும் அறிவிக்கப்படவில்லை. பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையிலும், பிரெஞ்சு பாடம் பயிலும் மாணவர்கள் தங்கள் பாடம் தொடருமா, தேர்வு எழுத முடியுமா என்ற குழப்பத்தில் உள்ளனர். இந்த தெளிவற்ற நிலை மாணவர்களின் கல்வியில் பெரும் மன உளைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியின் தனித்துவமான பிரெஞ்சு மரபும், பிரெஞ்சு மொழி அறிவும் இங்குள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்பு, கலாச்சார தொடர்பு என பல வழிகளில் பயனளிப்பதாகும். அதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மாநில அரசு, மத்திய அரசின் அழுத்தத்திற்கு பணிந்து மாணவர்களை தத்தளிக்க விடுவது ஏற்க முடியாது.
எனவே, தேசிய மக்கள் முன்னணி சார்பில் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம்:
- புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் – பாஜக அரசு, பிரெஞ்சு பாடமொழியை தொடர்ந்து பாதுகாக்கும் என்பதை வெளிப்படையாகவும் உறுதியாகவும் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
- மத்திய அரசின் மும்மொழி கொள்கையை புதுச்சேரியின் சிறப்பு அந்தஸ்துக்கு உட்பட்டு விலக்கு அளிக்க வலியுறுத்தி, முதலமைச்சர் தலையிட்டு இறுதி தீர்வை பெற்றுத்தர வேண்டும்.
- தற்போது குழப்பத்தில் உள்ள பிரெஞ்சு பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல், இந்த கல்வியாண்டிலேயே பிரெஞ்சு பாடம் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்களின் எதிர்காலத்தை வைத்து அரசியல் செய்யாமல், புதுச்சேரி அரசு உடனடியாக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில், மாணவர்களையும் பெற்றோர்களையும் திரட்டி தேசிய மக்கள் முன்னணி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறோம்.
இப்படிக்கு,
சீ.சு.சுவாமிநாதன்
நிறுவனத் தலைவர்
தேசிய மக்கள் முன்னணி, புதுச்சேரி

More Stories
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026