தேசிய மக்கள் முன்னணி நிறுவனத் தலைவர் சீ.சு.சுவாமிநாதன் கண்டன அறிக்கை
புதுச்சேரி சட்டப்பேரவை பதவியேற்பு விழாவில் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தமிழ்த்தாய் வாழ்த்தான “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” பாடலைப் புறக்கணித்து, வந்தே மாதரம் பாடலை முதலில் பாடி, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்குத் தள்ளிய அரசின் செயலை தேசிய மக்கள் முன்னணி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
எனது கண்டனத்திற்கான காரணங்கள்:
- மாநில மாண்பு சீர்குலைப்பு: புதுச்சேரிக்கென தனியாக 04.01.1972 அரசாணை மூலம் அங்கீகரிக்கப்பட்ட பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதல் மரியாதைக்குரியது. தமிழகத்தைப் போல புதிதாகப் பொறுப்பேற்றவர்கள் இல்லை என்றபோதும், ஆட்சியில் தொடரும் மாண்புமிகு முதலமைச்சரும் அமைச்சர்களும் புதுச்சேரியின் மாண்பையும் தாய்மொழி உரிமையையும் விட்டுக்கொடுத்திருப்பது வெட்கக்கேடு.
- அரசியல் சட்ட மரபு மீறல்: கூட்டாட்சித் தத்துவத்தில் மாநிலங்களின் மொழி, பண்பாட்டு அடையாளங்களுக்குத் தனி மரியாதை உண்டு. அரசு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் முடிவதுதான் 50 ஆண்டுகால மரபு. அதை உடைத்து தமிழை மூன்றாம் இடத்திற்குத் தள்ளியது திட்டமிட்ட மொழி அவமதிப்பு.
- பொறுப்பற்ற தன்மை: பதவியேற்பு என்பது அரசியலமைப்பின் மீது உறுதிமொழி எடுக்கும் புனித நிகழ்வு. அந்த மேடையிலேயே மாநிலத்தின் தாய்மொழிப் பாடலை இரண்டாம் தரமாக்கியது, பதவியில் இருப்பவர்கள் மக்களுக்கும் மண்ணுக்கும் செய்யும் துரோகம்.
தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை:
- முதலமைச்சர் உடனடியாக இந்த மரபு மீறலுக்குப் பொறுப்பேற்று மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
- இனிவரும் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதல் பாடலாகப் பாடப்படும் என அரசாணை மூலம் உறுதி செய்ய வேண்டும்.
- இந்த நடைமுறை மாற்றத்திற்குக் காரணமான அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“தமிழன் நான் என்றும் தலைகுனிய மாட்டேன்” என்று புதுவையின் மண்ணின் மைந்தன் பாரதிதாசன் பாடினான். அவன் பாடலையே தலைகுனிய வைத்துவிட்டு புதுச்சேரியை ஆள நினைப்பது பகல் கனவு.
தமிழ் வெல்லும். தமிழரின் உரிமை வெல்லும்.
நன்றி
இவண்
சீ.சு.சுவாமிநாதன்
நிறுவனத் தலைவர்
தேசிய மக்கள் முன்னணி
நாள்: 13.05.2026

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.