சீ.சு.சுவாமிநாதன்
நிறுவனத்தலைவர், தேசிய மக்கள் முன்னணி
இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையின் மீதும், கூட்டாட்சி தத்துவத்தின் மீதும், ஒரு சிறிய யூனியன் பிரதேசத்தின் 300 ஆண்டு நாகரிகத் தொடர்ச்சியின் மீதும் நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாகவே CBSE-யின் மூன்றாவது மொழி கட்டாய சுற்றறிக்கையை நாங்கள் பார்க்கிறேன்.
இது தேசிய கல்விக் கொள்கை 2020 என்ற பெயரில் இந்தி-சமஸ்கிருதத்தை திணிக்கும் அரசியல் திட்டம். இந்த மொழி ஆக்கிரமிப்புக்கு புதுச்சேரியில் ஆளும் NRC BJP கூட்டணி அரசு அளிக்கும் மவுன சம்மதம், வரலாறு மன்னிக்காத துரோகம்.
_1. புதுச்சேரி மீதான இரட்டைத் தாக்குதல்:
ஒன்றிய அரசும், மாநில அரசும்_
தேசிய கல்விக் கொள்கை அறிமுகமானபோதே புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு இதன் ஆபத்தை உணர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஒரு பொறுப்புள்ள மாநில அரசு என்ன செய்திருக்க வேண்டும்? அந்த வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டு மக்கள் நலன் காத்திருக்க வேண்டும்.
ஆனால் BJP NRC அரசு செய்தது என்ன?
சட்டமன்றத்தில் NEP-ஐ எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. உயர்நீதிமன்ற வழக்குக்கு சட்ட ஆதரவு தரவில்லை. CBSE சுற்றறிக்கை வந்த பிறகும் முதல்வர் மவுனம் காக்கிறார்.
இது நிர்வாகத் தோல்வி அல்ல. இது திட்டமிட்ட அரசியல் அடிபணிவு. டெல்லியின் கட்டளைக்கு புதுச்சேரியின் தலையை அடகு வைக்கும் நாகரீகமற்ற அரசியல். NRC என்ற பெயரை வைத்துக்கொண்டு புதுச்சேரி நலனை BJP-யிடம் விற்கும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது என புதுச்சேரி மக்கள் சார்பில் கேட்கிறோம்.
2. பிரெஞ்சு என்பது பாடம் அல்ல, ஒரு தலைமுறையின் எதிர்காலம்
இங்கே பிரச்சினை 400 ஆசிரியர்களின் வேலை மட்டுமல்ல. பிரச்சினை அதைவிட பெரியது.
1674 முதல் பிரெஞ்சு இங்கே வாழ்வியல். கடந்த 3 தலைமுறைகளாக புதுச்சேரி மாணவர்கள் பிரெஞ்சு படித்து, பிரெஞ்சு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெற்று, பிரான்ஸ், கனடா, ஆப்பிரிக்க நாடுகள், ஐ.நா. அமைப்புகளில் பணியாற்றுகிறார்கள். பிரெஞ்சு என்பது புதுச்சேரி இளைஞனின் உலகளாவிய கடவுச்சீட்டு.
இன்று 6-ம் வகுப்பில் பிரெஞ்சை நீக்கினால், நாளை 12-ம் வகுப்பு வரை பிரெஞ்சு படிக்கும் வாய்ப்பு பறிபோகும். இதன் பொருள் என்ன? இன்று பிரெஞ்சு படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி. நாளை பிரெஞ்சு படிக்கப்போகும் தலைமுறையின் உலகக் கனவு கருக்கப்படும். பிரான்ஸ் செல்லும் கல்வி-வேலைவாய்ப்பு வழி நிரந்தரமாக அடைக்கப்படும்.
ஒரு சுற்றறிக்கை ஒரு சமூகத்தின் அடுத்த 50 ஆண்டு வளர்ச்சியை சிதைக்கிறது. இதை NEP என்ற பெயரில் நியாயப்படுத்துவது, மக்கள் விரோத கொள்கையின் உச்சம். NEP வளர்ச்சிக்கான கொள்கை அல்ல. அது தலைமுறைகளின் வாய்ப்பை பறிக்கும் சுரண்டல் திட்டம்.
3. சட்ட விரோதம், நீதிமன்ற அவமதிப்பு, சர்வதேச ஒப்பந்த மீறல்
1963 Treaty of Cession பிரிவு 8 இந்திய அரசை கட்டுப்படுத்துகிறது: “புதுச்சேரி மக்களின் பிரெஞ்சு மொழியை பாதுகாப்போம்.” இது சர்வதேச உறுதிமொழி. Government of Union Territories Act பிரிவு 34 பிரெஞ்சுக்கு சட்ட அங்கீகாரம் தருகிறது.
மாணவர்கள் கூட்டமைப்பின் வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது CBSE உத்தரவு போடுவது நீதிமன்ற அவமதிப்பு. இதை தடுத்து நிறுத்த வேண்டிய BJP NRC அரசு, குற்றவாளி கூண்டில் ஒன்றிய அரசோடு சேர்ந்து நிற்கிறது.
4. NEP-ன் உண்மை முகம்: ஒற்றை கலாச்சார வெறி
‘மும்மொழி’ என்று சொல்லி, பிரெஞ்சை எடுத்துவிட்டு இந்தி-சமஸ்கிருதத்தை வைப்பது ஏன்? ஏனென்றால் NEP-ன் நோக்கம் கல்வி அல்ல. இந்தியாவின் பன்மொழி-பண்பாட்டு வேர்களை அறுத்து, நாக்பூர் சித்தாந்தத்தின் ஒற்றை கலாச்சாரத்தை திணிப்பது.
புதுச்சேரி அதற்கு பலிகடா ஆக முடியாது. மாஹே-யில் மலையாளத்தையும், ஏனாம்-ல் தெலுங்கையும் அழித்து இந்தியை திணிக்கும் அரசியலமைப்பு விரோத செயலை அனுமதிக்க முடியாது.
தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு:
- CBSE சுற்றறிக்கையை ஒன்றிய அரசு நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும். இதை வலியுறுத்தி BJP NRC அரசு உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
- NEP -ஐ புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் உறுதிமொழி வேண்டும். மக்கள் நலனுக்கு எதிரான NEP-ஐ BJP NRC அரசு நிராகரிக்க வேண்டும். மேலும் CBSE பாடமுறை மட்டுமின்றி மாநிலவழி கல்வியும் புதுச்சேரியில் கொண்டு வரப்பட வேண்டும்
- பிரெஞ்சு மொழி புதுச்சேரியின் கல்வி, வேலைவாய்ப்பு, சர்வதேச தொடர்புக்கான அடிப்படை என்பதால், அதை பாதுகாக்க சட்டப் பாதுகாப்பு வேண்டும்.
- மாணவர்கள் கூட்டமைப்பின் வழக்கில் புதுச்சேரி அரசு உடனே இணைய வேண்டும். NEP-க்கு எதிராக அரசு வாதிட வேண்டும்.
ஆளும் BJP NRC அரசுக்கு எச்சரிக்கை:
நீங்கள் டெல்லியின் அடிமைகளா அல்லது புதுச்சேரி மக்களின் பிரதிநிதிகளா என்பதை முடிவு செய்யும் தருணம் இது. மக்கள் தலைமுறையின் எதிர்காலத்தை NEP-க்கு பலி கொடுத்தால், அந்த துரோகத்தில் இருந்து நீங்கள் தப்ப முடியாது.
அடுத்தகட்ட ஜனநாயக போராட்டம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகள், மாணவர்-பெற்றோர் அமைப்புகளோடு ஆலோசித்து விரைவில் அறிவிப்போம். 1965-ஐ விட பெரிய மொழிப்போரை புதுச்சேரி மண் சந்திக்க நேரிட்டால், அதற்கான முழு பொறுப்பும் ஒன்றிய பாஜக அரசையும், துரோக NRC அரசை மட்டுமே சாரும்.
புதுச்சேரியின் அடையாளம் விற்பனைக்கு அல்ல.
சீ.சு.சுவாமிநாதன்
நிறுவனத்தலைவர்
தேசிய மக்கள் முன்னணி
9787721199
www.dmmparty.com
www.putsf.com

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.