கோவை மே:24
கடந்த 21.05.2026 அன்று இரவு சுமார் 08.30 மணி அளவில்,கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளபாளையம்,பாரதிபுரம்,அருணகிரிநாதர் வீதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி மாலை சுமார் 05.00 மணி அளவில் காணாமல் போனதாக காவல் அவசர உதவி எண் 100 மூலம் தகவல் கிடைக்கப்பெற்றது.தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு,புகார் பெற்று அதே இரவு சுமார் 10.00 மணியளவில் குழந்தை காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கருமத்தம்பட்டி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு,காணாமல் போன சிறுமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.விசாரணையின் போது சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில்,நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி (33),த/பெ.காசிநாதன் சிறுமியின் குடும்பத்திற்கு பழக்கமான அண்டை வீட்டுக்காரர் சிறுமியை அழைத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள மரியா ரோஸ் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் பதுங்கியிருந்த குற்றவாளி கார்த்தியை காவல்துறையினர் சுற்றிவளைத்தனர்.அப்போது காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க முயன்ற அவர் மேல்மாடியில் இருந்து குதித்ததில்,அவரது வலது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டது.பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில்,குற்றவாளி கார்த்தி,சிறுமியை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து,பின்னர் கண்ணம்பாளையம் குளம் அருகிலுள்ள தென்னைத் தோட்டத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும் நடைபெற்ற விசாரணையில்,பாரதிபுரம்,பள்ளபாளையத்தை சேர்ந்த மோகன்(30),த/பெ.ராமசாமி என்பவர்,முக்கிய குற்றவாளிக்கு உறுதுணையாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
கைது செய்யப்பட்ட கார்த்தி தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இவ்வழக்கு சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை கொடர்புடையது என்பதால்,வழக்கில் போக்சோ சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
முதல் தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் மேற்கொண்ட துரிதமான நடவடிக்கை மற்றும் காவல்துறையின் தயார்நிலை காரணமாக,24 மணி நேரத்திற்குள் வழக்கு கண்டறியப்பட்டு வழக்கின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும்,பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விரைவாக அரசின் நிவாரண உதவித் தொகை கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

More Stories
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு நடை ரோந்து – குற்ற தடுப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபாடு
நகைக்கடை சுவரைத் துளையிட்டு திருட்டு: சாவியை கவனிக்காததால் 2 கிலோ தங்கம் தப்பியது! பர்கூர் அருகே பரபரப்பு
நகைக்கடை சுவரைத் துளையிட்டு திருட்டு: சாவியை கவனிக்காததால் 2 கிலோ தங்கம் தப்பியது! பர்கூர் அருகே பரபரப்பு