June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி விவகாரம்…

உங்களுக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளதா..,.? செய்தியாளர்களிடம் எதிர் கேள்வி கேட்ட அமைச்சர் செங்கோட்டையன்…

ஈரோடு செய்தியாளர்கள் சந்திப்பில் கடுகடுப்பு காட்டியதால் சலசலப்பு…

ஈரோடு. மே. 31

ஈரோட்டில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி விவகாரம் குறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கடுகடுப்பு காட்டியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை 10 மணி அளவில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு, அமைச்சர்கள் கலந்து கொண்ட ஈரோடு மாவட்ட அளவிலான அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வு கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன், கைத்தறித்துறை அமைச்சர் எம். விஜய் பாலாஜி, எம்எல்ஏக்கள், ஈரோடு மேற்கு ஆனந்தகுமார், அந்தியூர் ஹரி பாஸ்கர், பவானிசாகர் தமிழ்ச்செல்வி, மொடக்குறிச்சி சண்முகன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்தகுமார் மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் கீழ் தளத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜய் பாலாஜி, ஆட்சியர் ச. கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் ஆகியோர் பங்கேற்றனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது…

தமிழகத்தில் தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் மக்கள் விரும்பிய ஒரு நல்லாட்சி இன்று அமைந்துள்ளது.

மக்கள் விரும்பிய இந்த நல்ல ஆட்சியை, ஆறு மாதம் காலங்கள் வரை எந்த ஒரு விமர்சனமும் செய்யாமல், இந்த புதிய அரசுக்கு ஆறு மாதம் வரை அரசின் செயல்பாடுகளை கவனிப்போம் அதன் பிறகு குறைகளை சுட்டிக்காட்டுவோம் என்று சொன்ன திமுக மற்றும் அதிமுக தற்போது, ஆட்சி அமைந்து 6 நாட்களிலேயே குறைகளையும் குற்றங்களையும் சொல்லி வருகின்றனர்.

தமிழக மக்களுக்கான பல்வேறு புதிய திட்டங்களை தமிழக முதல்வர் அவர்கள் வகுத்து வருகின்றார்கள், அதனை செயல்படுத்தும் போது குறை கூறியவர்கள் தங்களின் வாய்களை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பார்கள்.

இவ்வாறு அமைச்சர் கே. ஏ ஏ செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அதன் பிறகு செய்தியாளர்கள் ஒவ்வொருவராக அமைச்சரிடம் கேள்வி கேட்க தொடங்கினர்.

தமிழகத்தில் 717 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில், அந்த அளவிற்கு கடைகள் மூடப்படவில்லை என தெரிய வருகிறது. மேலும் பாட்டிலுக்கு 20 ரூபாய் வரை கூடுதலாக வைத்து விற்கப்படுகிறது, என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வரும் நிலையில் அரசின் முடிவு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றது பத்திரிக்கையாளர்கள் ஆகிய உங்களின் பார்வையில் இந்த பிரச்சனை தவறாக தெரிகிறது என்று பதில் அளித்தார்.

பின்னர் ஆத்திக்கடவு அவிநாசி திட்டம் இன்னும் முழுமை அடையவில்லை என கேட்டதற்கு, அந்தத் திட்டத்தை கொண்டு வந்ததே நான்தான் அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்று பதில் அளித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை இந்தத் தூய சக்தி ஆட்சியிலும் நடைபெற்று தான் வருகிறது என்ற கேள்விக்கு, தற்பொழுது தான் ஆட்சிக்கு வந்து உள்ளோம் போகப் போக சட்ட ஒழுங்கு நிலைமை சிஎஸ் செய்யப்படும் என்று பதிலளித்தார்.

மேலும் விவசாய கடன் தள்ளுபடி பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியின் படி, விவசாய கடன் தள்ளுபடி என்பது இல்லை என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்களே…,? என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில்,

அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன் உனக்கு ஐந்து ஏக்கர் நிலம் உள்ளதா நீ ஏன் தேவையற்ற முறையில் இந்த கேள்வியை கேட்கின்றாய் என, கேள்வி கேட்ட செய்தியாளரிடம் கட்டுப்படித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி கேட்ட பொழுது, இத்தனை கேள்விகள் இப்பொழுது என்னிடம் கேட்கின்றீர்களே, ஜெயலலிதா அம்மா இருந்தபோது அவரிடம் இத்தனை கேள்விகள் கேட்க உங்களுக்கு துணிச்சல் இருந்ததா என்று கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து அவசரமாக வெளியேறி தனது காரில் ஏறி சென்று விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த செய்தியாளர்கள் சிறிது நேரம் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

பொறுப்பு மிக்க அனுபவம் உள்ள ஒரு மூத்த அமைச்சர் செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், அதற்குரிய பதிலை சொல்ல முடியாமல் கோபப்பட்டு கொண்டு ஒரு வணக்கம், நன்றி கூட சொல்லாமல் அமைச்சர் செங்கோட்டையன் சென்றது செய்தியாளர்கள் மத்தியில், வருத்தத்தை ஏற்படுத்தியது.