வல்லம் ஆகஸ்ட் 23.
விழுப்புரம் மாவட்டம் வல்லம் வட்டாரத்தில் மா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மா மரங்களில் கவாத்து மேற்கொள்வது தொடர்பாக தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
வல்லம் வட்டாரத்தில் சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் பெங்களூரா, பங்கனப்பள்ளி, இமாம் பசந்த், செந்தூரா, அல்போன்சா உள்ளிட்ட பல்வேறு மா ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது மா அறுவடை முடிவடைந்துள்ள நிலையில், மரங்களில் கவாத்து மேற்கொள்வது முக்கியப் பணியாக உள்ளது.
மா மரங்களில் முறையாக கவாத்து செய்வதன் மூலம் புதிய வளர்ச்சித் தளிர்கள் உருவாகி, பூக்கும் தன்மையும் மகசூலும் அதிகரிக்கிறது. குறிப்பாக முதிர்ந்த கிளைகள் மற்றும் 6 வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய புதிய தளிர்களிலேயே பூக்கள் உருவாகும் என்பதால், சரியான முறையில் கவாத்து மேற்கொள்வது அவசியம் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
கவாத்தின்போது கீழ்நோக்கித் தொங்கும் கிளைகள், மரத்தின் உட்பகுதியில் குறுக்காக வளர்ந்து மையப்பகுதியை அடைக்கும் கிளைகள் மற்றும் நோயுற்ற, காய்ந்த கிளைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். இதன் மூலம் மரத்திற்கு நல்ல வடிவம் கிடைப்பதுடன், உரமிடுதல் மற்றும் மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளையும் எளிதாக மேற்கொள்ள முடியும்.
மரத்தின் மொத்த கிளைகளில் 25 சதவீதத்திற்கும் அதிகமான கிளைகளை ஒரே நேரத்தில் வெட்டக்கூடாது. பெரிய கிளைகளை வெட்டும்போது முதலில் கீழ்ப்புறத்தில் 20 முதல் 40 மி.மீ. ஆழத்திற்கு வெட்டு ஏற்படுத்தி, பின்னர் மேல்புறத்தில் இருந்து முழுமையாக வெட்ட வேண்டும். இதனால் பட்டை பிளவுபடுவதும், கிளை முறிந்து விழுவதும் தவிர்க்கப்படும்.
பெரிய செங்குத்தாக வளரும் கிளைகள் மற்றும் தண்டுகளை சிறிது சாய்வாக வெட்டுவதன் மூலம் வெட்டப்பட்ட பகுதியில் தண்ணீர் தேங்குவது தடுக்கப்பட்டு, அழுகல் ஏற்படும் வாய்ப்பும் குறையும். பெரிய கிளைகள் மற்றும் முக்கியத் தண்டுகளை ஒரே வெட்டில் அகற்றாமல், பகுதி பகுதியாக வெட்ட வேண்டும்.
கவாத்து செய்த பின்னர் வெட்டப்பட்ட காயங்களில் 0.3 சதவீதம் காப்பர் ஆக்சிகுளோரைடு மருந்தைத் தெளிக்க வேண்டும் என்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறையான கவாத்து தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதன் மூலம் மா மரங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சிறந்த பூப்பிடிப்பு மற்றும் அதிக மகசூலைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…