சேலத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்.
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி, பால் உற்பத்தியாளர்கள் நேற்று முதல் ஆவினுக்கு பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல இடங்களில் பாலை தரையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக ஆவின் பால் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 8,800 பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளது. இந்த சங்கங்கள் மூலம் 3,16,000 பால் உற்பத்தியாளர்களிடமிருந்து, தினசரி 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, ஆவின் நிறுவனத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 31 லட்சம் லிட்டர் பால், நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகளும், பால் உற்பத்தியாளர்களும் போராடி வருகின்றனர். இந்நிலையில், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக கடந்த 19ம் தேதி, சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்தார்.
அதாவது, கொள்முதல் விலை ரூ.38ல் இருந்து ரூ.41 ஆக அதிகரிக்கப்படும் என்று கூறினார். ஆனால், இதை பால் உற்பத்தியாளர்கள் ஏற்கவில்லை. பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும் என்று கோரி ஆக.23 முதல் ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். அதன்படி, நேற்று மாநிலம் முழுவதும் விவசாயிகள், ஆவினுக்கு பால் வழங்காமல் போராட்டத்தை தொடங்கினர். சேலம் மாவட்டத்தில் நேற்று 836 பால் கூட்டுறவு சங்கங்களிலும், பால் உற்பத்தியாளர்கள் பாலை விற்பனைக்கு கொண்டு வரவில்லை. பால் கூட்டுறவு சங்கம் முன்பு, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாலை ஊற்றி மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல் பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களிலும் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் (பால்) மாநில செயலாளர் பெரியண்ணன் கூறுகையில், அரசு எங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுக்கிறது. தனியார் நிறுவனங்கள் பாலுக்கான கொள்முதல் விலையை அதிகமாக வழங்குவதால் ஆவினில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் ஏராளமானோர் தனியாருக்கு சென்று விட்டனர்.
மீதமுள்ளவர்களும் செல்லும் நிலை ஏற்படும் என்றார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில், `அரசு லிட்டருக்கு ரூ.3 மட்டுமே அதிகரித்துள்ளது. இது போதுமானதாக இல்லை. இதன் காரணமாக நேற்று காலை கோவை, பொள்ளாச்சி, சேலம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் உள்பட பல ஆவின் நிறுவனத்திற்கு வழக்கமாக வரும் பால் வரத்து 50 சதவீதம் குறைந்துள்ளது. பால் கொள்முதல் விலையை அரசு அதிகரிக்காத பட்சத்தில் பல கட்ட போராட்டம் நடத்தப்படும்,’ என்றார். இதன் காரணமாக பொதுமக்களுக்கு ஆவின் பால் சப்ளை தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டு உள்ளது.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…
பஞ்சாயத்து செய்வதாக கூறி பணம் நிலம் ஆகியவற்றை மோசடியான முறையில் அபகரித்துக் கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..