July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மத்தூர் சிவன் கோயில் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் உள்ள சிவன் கோயில் எதிரில், பழைய மேம்பாலத்திற்கு கீழே அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்த இடமே ஒரு குப்பைக்காடாக மாறி வருவதோடு, அங்கு தேங்கும் குப்பைகள் தற்போது சாலையோர பகுதி வரை பரவி, ரோட்டிற்கு வரும் அவல நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.
இதனால் அவ்வழியாகச் செல்லும் பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் துர்நாற்றம் தாங்க முடியாமல் தங்களது மூக்கை மூடிக்கொண்டே செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், இந்த சுகாதார சீர்கேட்டினால் அப்பகுதியில் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, இந்த மேம்பாலத்திற்கு கீழே தேங்கியுள்ள குப்பைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், இப்பகுதியில் மீண்டும் குப்பைகளைக் கொட்டாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் முபாரக்