June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,08/06/2026.

கடந்த ஓராண்டில் சேலம் மாநகரப் பகுதியில் 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது.

சேலம் மாநகரக் காவல் துறை ஆணையாளர் அனில் குமார் கிரி அறிவிப்பு.

கடந்த ஓராண்டில் சேலம் மாநகரப் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த 79 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலை மாநகரக் காவல் துறை ஆணையாளர் அனில் குமார் கிரி தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சம் போதை மாத்திரைகள், மருந்துகள் பறிமுதல்

சேலம் மாவட்டம், தாதகாப்பட்டியில் போதை மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை மாநகரக் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு லட்சம் போதை மாத்திரைகள், மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக மாநகரக் காவல் துறை ஆணையாளர் அனில் குமார் கிரி சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இளைஞர்கள் அவ்வப்போது அந்த வீட்டுக்குச் சென்று மாத்திரைகளை வாங்கிச் செல்வதாகவும் அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

மேகலா, கணவர் கைது

இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த மேகலாவிடம் (48) போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், அவர் போதை மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்து இளைஞர்களுக்கு விற்கப்படுவது தெரிய வந்தது.

மேலும், அவரது கணவர் கண்ணன் (50) கடந்த 21ஆம் தேதி தாரமங்கலம் பகுதியில் போலீஸார் நடத்திய சோதனையின்போது, போதை மாத்திரைகளை விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, மேகலாவைக் கைது செய்த போலீஸார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு லட்சத்துக்கும் மேலான போதை மாத் திரைகள், மருந்துகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 6.82 லட்சமாகும். இதில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஆணையாளர் அனில் குமார் கிரி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

போதைப் பொருள் உபயோகம் குறித்து கெடுதல்களை விளக்கிடும் வகையில் கல்லூரி மாணவ மாணவியர் இடையே மாநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த அவர், உணவுப் பொருள் பாதுகாப்பு துறை, மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்த கடைகள் கண்டறியப்பட்டு அவை சீல் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

250 கிலோ கஞ்சா பறிமுதல்

கடந்த 6 மாதத்தில் சேலம் மாநகரக் காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 79 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் சேலம் மாநகர காவல் துறை ஆணையாளர் அனில் குமார் கிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.