நாகரசம்பட்டி, மே 08:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜம்புகுட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் கை வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்புகுட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சத்தியசீலன் (45) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நேற்று முழுவதும் வீட்டிலேயே இருந்த அவர், இரவு 8:30 மணி அளவில் வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் அவரது செல்போனுக்கு அழைத்தபோது அது ‘சுவிட்ச் ஆஃப்’ செய்யப்பட்டிருந்தது. உறவினர்கள் அவர் விரைவில் வந்துவிடுவார் என நினைத்து இரவு உறங்கியுள்ளனர்.
இன்று காலை சத்தியசீலனின் நிலத்திற்கு அருகே சென்ற பக்கத்து நில உரிமையாளர், அங்கு ஒரு உடல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து தகவல் அளித்தார். உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சென்று பார்த்தபோது, அது படுகொலை செய்யப்பட்ட சத்தியசீலன் என்பது உறுதி செய்யப்பட்டது. அவரது கை துண்டிக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, பர்கூர் டிஎஸ்பி மற்றும் நாகரசம்பட்டி போலீசார் விரைந்து வந்தனர். தடயங்களைச் சேகரிக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.
சத்தியசீலனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக இந்தக் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதமா? என்ற கோணத்தில் நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொடூரக் கொலை: கை துண்டிப்பு – எஸ்பி நேரில் விசாரணை!

More Stories
வாரிசு சான்றிதழுக்கு ரூ.4,000 லஞ்சம்: மணப்பாறை அருகே முதுநிலை வருவாய் ஆய்வாளர் கையும் களவுமாக கைது
மணப்பாறை போலீசார் அதிரடியால் சூதாட்ட கும்பல் ஓட்டம் மூன்று பேர் கைது.
மனைவி விவாகரத்து கோரி வழக்கு, கணவன் ஆத்திரத்தில் மனைவியின் அண்ணன் மற்றும் அண்ணனின் மாமியார் மாமியார் ஆகியோருக்கு கத்தி குத்து போச்சம்பள்ளி அருகே பரபரப்பு.