June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் 136-வது ஜெயந்தி

மனித குல வரலாற்றில் மக்களது உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்கள் அடக்கி ஒடுக்கப்படுகிறபோது, மக்கள் ஆட்சியாளனுக்கு எதிராகக் கிளர்த்தெழுந்து, தமது எதிர்ப்புகளை திடீரென வெளிக்காட்டுகிற போது, அது புரட்சியாக உருவெடுக்கிறது.

புரட்சி என்பது அரசியல் துறையை அடிப்படையாகக் கொண்டு, ஒரு நாட்டின் அரசியல், கல்வி, பொருளாதார, சமூக கலாச்சாரத் துறைகளில் ஏற்ப்படுத்தும் மாபெரும் மாற்றம். சரித்திரத்தின் பக்கங்களை திருப்பி பார்த்தோமேயானால் எந்த ஒரு புரட்சியுமே தோற்றதாக தடயங்களே இருக்காது.

தென்ஆப்பிரிக்காவில் கறுப்பர்களுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் இனவெறித் தாக்குதல் நடத்தியபோது, நெல்சன் மண்டேலா தலைமையில் புரட்சி வெடித்தது. ஏறத்தாள 27 ஆண்டுகளுக்குப் பிறகு அது வெற்றியும் கண்டது.

1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் ஜார் மன்னர்களின் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர, லெனின் தலைமையில் சோஷியலிசப் புரட்சி வெடித்தது. பின்னர் அது வெற்றியும் கண்டது.

உலகின் சர்க்கரைக் கிண்ணம் என்று அழைக்கப்பட்ட சின்னஞ்சிறிய நாடான கியூபா, ஆங்கிலேயர்களால் அடிமைபடுத்தப் பட்டிருந்த போது சேகுவேரா, பிடல்கேஸ்ட்ரோ என்ற இருபெரும் தலைவர்களின் வழிகாட்டுதலின் படி புரட்சி வெடித்தது. 1959 இல் அது வெற்றியும் கண்டது.

இந்த புரட்சியாளர்களின் வரிசையில் தான், நம் பாரத தேசத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக தன் வாழ்வையே முற்றாகத் துறந்து அடிமைச்சேற்றில் அமிழ்ந்து கிடந்தவனை மீட்டுருவாக்கம் செய்து, அவன் மனதில் புரட்சி விதையை விதைத்தவர் அண்ணல் அம்பேத்கர்.

மகாராஸ்டிர மாநிலம் அன்றைக்கு பம்பாய் மாகாணம் என்று பிரிந்திருந்த காலத்தில் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் மகர் என்னும் தாழ்த்ப்பட்ட சமூகத்தில் ராம்ஜிசக்பாலுக்கும், பீமாபாய்க்கும் 14 வது மகனாகத் அண்ணல் அம்பேத்தகர் பிறந்தார். ஆறு வயதாக இருக்கும் போது தன் தாயாரை இழக்கிறார்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் தோன்றிய ஒரே ஒரு காரணத்திற்காக, தான் படித்த பள்ளியிலும் கல்லூரியிலும் பணிபுரியும் இடத்திலும், மற்றும் அவர் செல்லும் இடமெல்லாம் தனக்கு ஏற்பட்ட அவமானங்களையும் வலிகளையும் தாங்கிக்கொண்டு, arise awake stop not till the goal is reached அதாவது எழுந்திரு விழித்திரு அடையும் இலக்கை அடையும் வரை நிறுத்தாதே, என்று சுவாமி விவேகானந்தர் கூறியதைப்போல தான் கொண்ட இலக்கை அடையும் வரை அவர் தூங்கவில்லை. கல்வியையும், தகுதியையும் வளர்த்துக்கொண்டார்.

அம்பேத்கர் அவர்கள் தபோலியில் தொடக்கக் கல்வியை முடித்தபின் ‘சதாரா”வில் இருந்த உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அந்த நாளில் மகர் இனமக்களை தீண்டப்படாத மக்களாக ஒதுக்கி வைத்திருந்ததால் மகர் இன மாணவர்கள் கல்வி நிலையங்களில் மற்ற மாணவர்களுடன் சமமாக நடத்தப்பட்டதில்லை. தீண்டப்படாத மாணவர்கள் கல்விக் கூடங்களுக்குச் செல்ல அனுமதி கிடையாது. அப்படியே ஒரு சில பள்ளிகளில் அனுமதித்தாலும் சக மாணவர்களுடன் சமமாக அமர்ந்து கல்வி பயிலக்கூடாத நிலை இருந்தது. வகுப்பறையில் ஒரு மூலையில் தான் தனியாக அமரவேண்டும். அதிலும் தரையில் அமரக்கூடாது. காரணம் தரையில் அமர்ந்தால் தீட்டாகிவிடுமாம். அதனால் அவர்கள் வீட்டிலிருந்த கோணியை எடுத்து வந்து அதன் மீதுதான் அமர்ந்து பாடம் பயிலவேண்டும். வகுப்பறையில் பின்புறம் மற்ற மாணவர்கள் அருகில் வந்திடா வண்ணம் கோணிப்பையின் மேல் அமர்ந்து கல்வி பயில வேண்டும். பயின்றபின் வீட்டிற்கு அந்த கோணிப்பையை எடுத்துச்செல்ல வேண்டும்.

மேலும் ஆசிரியர்கள் தீண்டப்படாத மாணவர்களைத் தவறிக்கூட தொடமாட்டார்கள். மற்ற மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களை தீண்டப்படாத மாணவர்கள் தொட்டுவிடக்கூடாது. வெகு தொலைவில் அமர்ந்து ஆசிரியர் நடத்தும் பாடத்தைக் கேட்டுத்தான் பயில வேண்டும். சக மாணவர்களுடன் சேர்ந்து புத்தகம் வாசிக்கவோ பாட்டுபாடவோ எந்தவித உற்சாகத்தையும் ஆசிரியர்கள் தீண்டப்படாத மாணவர்களுக்கு அளிக்க மாட்டார்கள்.

தீண்டப்படாத மாணவர்கள் வகுப்பில் இருக்கும்போது தாகம் எடுத்தால் தண்ணீர் எடுத்துக் குடிக்கக்கூடாது. இரக்கம் கொண்ட ஒரு சில மாணவர்கள் தீண்டப்படாத மாணவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வாயில் ஊற்றுவார்கள். எந்தப் பொருளையும் தீண்டப்படாத மாணவர்கள் தொடமல் நீர் அருந்த வேண்டும். இந்த கொடுமையை சந்தித்து கொண்டு தான் அம்பேத்கர் கல்வி பயின்றார்.

ஒரு நாள் ஆசிரியரின் கட்டளைப்படி கரும்பலகையில் ஒரு கணக்கைப் போட்டுக்காட்ட அம்பேத்கர் சென்றார். உடனே மற்ற மாணவர்கள் கரும்பலகைக்குப் பின்புறம் வைத்திருந்த தங்களின் உணவுப் பாத்திரங்களை ஓடிச்சென்று எடுத்துவைத்துக் கொண்டனர். காரணம் அம்பேத்கர் ஒரு தீண்டப்படாத வகுப்பைச் சேர்ந்தவர். அவர்களின் பாத்திரத்தை அம்பேத்கர் தொட்டுவிட்டால் தீட்டாகிவிடும் என்று அவ்வாறு நடந்துகொண்டனர்.

அது மாத்திரம் அல்ல அவர் பட்ட இன்னல்கள், 1934ம் ஆண்டு தீண்டப்படாத வகுப்பினர் இயக்கதில் அவரோடு பணி செய்தவர்கள் ஒரு சுற்றுலாவிற்குச் செல்லவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். சுற்றுலாவின் ஓர் முக்கிய இடம் தவுலாதாபாத். அவர்களின் சுற்றுலாக் குழுவினரின் எண்ணிக்கை முப்பது பேரைக் கொண்டிருந்தது. இயோலா, நாசிக் நகரத்திலிருந்து அவுரங்கதாபாத் செல்லும் வழியில் இருந்தது. அவர்கள் தங்கள் பயண திட்டத்தை வேண்டும் என்றே வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஒரு தீண்டத்தகாதச் சுற்றுலாப்பயணி நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் கஷ்டங்களைத் தவிர்ப்தற்காகவே பிறர் அறிந்துகொள்ளா வண்ணம் பயணத்தை திட்டமிட்டார்கள். எதிர்பார்த்தபடியே தவுலாதாபாத் நகரத்தில் நிலைமை வேறுவிதமாக இருந்தது. அங்கு அவர்கள் வருவதைப்பற்றி முன் கூட்டியே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அறிவித்திருந்ததனால் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பை மக்கள் தவுலதாபாத்தில் ஏற்பாடு செய்தி ருந்தனர்.

அவர்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டு இருட்டும் முன்பு முகமதியர் தொழுகை நடத்தும் நேரத்திற்கு முன்பாக தவுலாபாத் கோட்டைக்குச் சென்றார்கள்.

முகமதியர்கள் நோன்பு இருந்த ரம்சான் மாதம் அது. பிரயாணத்தின்போது ஆடைகள், முகங்கள் புழுதியடைந்திருந்தது. அவர்கள் எல்லோரும் உடலைக் கழுவிக்கொள்ள விரும்பி அதிகம் சிந்தனை செய்யாமல் அவர்களில் ஒருசிலர் முகத்தையும் கைகால்களையும் கோட்டையில் இருந்த குளத்தில் கழுவிக்க கொண்டனர்.
கோட்டைக்குள் செல்ல அனுமதிபெறவேண்டி கோட்டைக் காவலாளியிடம் அனுமதிகேட்க ஆரம்பித்தார்கள். இதற்கிடையில் பின்னாலிருந்து வந்துகொண்டிருந்த ஒரு வயதான முதியவர் தீண்டத்தகாதவர்கள் குளத்தை அசுத்தம் செய்து விட்டனர் என்று கூப்பாடு போட்டார். அங்கு இருந்த இளம் மற்றும் வயதான முகமதியர்கள் அவர்களை வசைபாட ஆரம்பித்தனர். தீண்ப்படாதவர்கள் தங்களின் நிலையை மறந்து குளத்தை அசுத்தப்படுத்தியதற்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்களை அச்சுறுத்தினர். இந்தக் குளத்தில் தீண்டத்தகாதோர் இறங்கக் கூடாது என்று இருக்கும்போது எப்படி குளத்தில் இறங்கலாம் என்று கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.

நாங்கள் வெளியூர்க்காரர்கள் தெரியாமல் குளத்தில் இறங்கிவிட்டோம் என்று அமைதியாக் கூறிய விளக்கத்தை முகமதியர்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. அவர்களை எரிச்சலூட்டும் அளவுக்கு ஆபாசமாகத் திட்டினார்கள். இருப்பினும் அவர்கள் அமைதி காத்தார்கள். தீண்டத்தகாதவர்கள் பொதுக்குளத்தில் உளள தண்ணீரை உபயோகிக்கக் கூடாது என்ற பொருளில் ஒவ்வொருவரும் அவர்களது மத ஆச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்று கூட்டத்திலிருந்த ஒரு முஸ்லீம் இளைஞர் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்தார். அம்பேத்கர் பொருமையை இழந்து ஒருவித கோபக்குரலில் கேட்டார், இதைத்தான் உங்கள் மதம் போதிக்கிறதா? முகமதியனாக ஒரு தீண்டத்தகாதவன் மாறினால் அவனை இந்தக் குளத்தில் இருந்து தண்ணீர் எடுக்கக் கூடாது என்று தடுப்பீர்களா?

இந்தக் கேள்வி அந்த முகமதியரிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. வந்திருந்த முகமதியர்கள் அமைதியானார்கள். பிறகு அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் கோட்டைக்குள் இருந்த எந்த தண்ணீரையும் தொடமால் இருக்க ஒரு காவல் காரன் அவர்களை பின் தொடர்ந்து வந்தான்.

ஒருவன் இந்துவுக்குத் தீண்டத்தகாதவன் என்றால் அவன் பார்சிக்கும், முகமதியனுக்கும் தீண்டத்தகாதவனே! என்பதை இந்த நிகழ்ச்சி படம் போட்டுகாட்டியது . இவைகள் அம்பேத்கர் வாழ்நாளில் ஏற்பட்ட நீங்காத அவமானச் சின்னங்களாகும்.

அது மாத்திரம் அல்ல,
அந்தநாளில் குழந்தைத் திருமணம் நடைமுறையில் இருந்தது . மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றிபெற்றவுடன் ஒன்பது வயதே நிரம்பிய இராமாபாய் என்ற பெண்ணுடன் அம்பேத்கருக்கு 17வது வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டது l. தீண்டப்படாதவர்களின் திருமணங்கள் போன்றவை மரியாதைக்குரிய இடங்களில் நடத்தவும் தடை விதித்திருந்தார்கள். ஒரு புதுமையான இடத்தில் அம்பேத்கரின் திருமணம் நடந்தது. பம்பாயில் பைகுல்லா மீன் மார்கெட்டில் ஒரு திறந்த கொட்டகையில் அம்பேத்கர் திருமணம் நடந்தது. மீன் கடை மார்க்கெட்டில் பகல் வியாபாரம் முடிந்தவுடன் இரவில் மணமகனும் அவருடைய உறவினர்களும் அகன்றிருந்த மேல் கூரையில்லாத கொட்டகையின் ஒரு மூலையில் குழுமினார்கள். மற்றொரு மூலையில் மணமகளும் அவருடயை உறவினர்களும் கூடினார்கள். அவர்கள் இருந்த இடத்தில் சாக்கடை நீர் ஓடிக்கொண்டிருந்தது. பகலில் மீன்களை வைத்து விற்கும் கல் மேடைகள் அவர்கள் அமர்வதற்கும் பெஞ்சு களாயின. அந்த மார்க்கெட் முழுவதும் திருமணக் கூடமாயிற்று. மீன் கடையின் நாற்றம் ஒருபுறம், விடிந்தால் மீன்கடை திறக்க வழிவிடவேண்டுமே என்ற அவசரம் ஒருபுறம். இதற்கிடையில் அவசரம் அவசரமாக திருமணம் நடந்தேறியது.

வீட்டில் மின்விளக்கில்லை;. அரிக்கோன் விளக்கில்தான் படித்தார். படிப்பதற்கு என்று ஒரு தனி அறை கிடையாது. சமைக்கும் இடம் படுக்கும் இடம் எல்லாம் ஒரே அறைதான். அதில் எல்லோரும் தூங்கிய பிறகு அம்பேத்கரும் அவர்களுடன் சேர்ந்தே தூங்குவார். அதிகாலை இரண்டு மணிக்கு அம்பேத்கரை இராம்ஜி அவர்கள் எழுப்பி படிக்க வைத்துவிட்டுத்தான் தான் தூங்கச் செல்வார். விடியும் வரை பாடங்களை கவனத்துடன் படிப்பார் அம்பேத்கர்.

கல்வியில் கவனத்துடன் பயின்றதாலும் அப்பாவின் அரவணைப்பாலும் அண்ணன் உதவியாலும் மெட்ரிகுலேஷன் தேர்வில் நல்ல மதிப்பெண்பெற்று வெற்றிபெற்றார். இந்த வெற்றிக்காக தீண்டப்படாத அனைத்து மக்களும் ஒன்றுகூடி பெரிய பாராட்டு விழாவினை நடத்தினார்கள்.

உள்நாட்டில் உயர்கல்வி
மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றிகண்ட அம்பேத்கருக்கு கல்லூரியில் சென்று பயில வேண்டும் என்ற ஆசை பெரிதும் இருந்தது. ஏழைகளுக்கும் தீண்டப்படாத மக்களுக்கும் கல்விக்காக உதவி செய்பவர் அப்போது யாரும் இல்லை. சில செல்வந்தர்களும் சமஸ்தான மன்னர்களும் தகுதியுள்ள மாணவர்களுக்காக சிறு தொகையை ஒதுக்கிவைத்திருந்தார்கள். அந்தத் தொகைகளும் உயர்சாதி மாணவர்களுக்குத்தான் கிடைக்கும். அப்படி இருந்தும் தன் மகனை கல்லூரியில் படிக்கவைக்க முன்வந்தார் இராம்ஜி.

அம்பேத்கர் அவர்கள் எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்க்கப் பட்டார். அம்பேத்கரின் மேல் படிப்பிற்கு பண உதவி செய்ய முடியாமல் இராம்ஜி மிகவும் சிரமத்திற்கு உள்ளானார். அந்த சமயத்தில் கிருஷ்ணாஜி அர்ஜூன் கெலுஸ்கா அம்பேத்கருக்கு உதவ முன்வந்தார். அவர் பரோடா மன்னர் சரபோஜின் ராவ் உதவியைப் பெற்றுத் தந்தார். மாதம் ரூபாய் 25 கல்வி உதவித்தொகையை பரோடா மன்னா வழங்கினார்.

பேராசிரியர் முல்லர் என்பவர் கல்லூரியில் மிகவும் நேர்மையுள்ள மனிதர். கல்லூரியில் படிக்கும் நன்றாக படிக்கும் மாணவர்களுள் அம்பேத்கரும் ஒருவர் என்பதைக் கண்டறித்து அவருக்கு உதவ முன்வந்தார். அம்பேத்கருக்கு வேண்டிய நூல்களைப் பெற்றுத் தந்தார். சில நாட்களில் உணவும் கொடுத்து உபசரித்தார். கல்லூரிப் பேராசிரியர் ஊக்கம் தந்ததாலும் தந்தையின் அரவணைப்பு அதிகம் இருந்ததாலும் கல்வியில் கவனம் செலுத்தி பயின்று பி.ஏ. பட்டப்படிப்பில் அம்பேத்கர் தேர்வுபெற்றார். அம்பேத்கர் தந்தை இராம்ஜி சக்பால் கண்ட கனவு நனவாயிற்று.

அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பு படிக்க 1913ம் ஆண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது என்று பரோட மன்னர் சாயிஜி ராவ் கெய்க்வாடு அவர்கள் ஆணை பிறப்பித்திருந்தார். அந்த ஆணையின்படி அம்பேத்கருக்கு நிபந்தனையுடன் கூடிய கல்வி உதவித்தொகை கிடைத்தது. நிபந்தனையாக, குறிப்பிட்டுள்ள பாடங்களை நன்குபடிப்பேன் என்றும் படித்தபின் பரோடா அரசில் பத்து ஆண்டுகள் பணியாற்றுவேன் என்றும் ஓர் ஒப்பந்தத்தில் அம்பேத்கர் கையெழுத்து இட்டார். அதன் பின்னரே, 1913ம் ஆண்டு ஜூன் மாதம் உயர் கல்வி பயில அமெரிக்கா சென்றார் அம்பேத்கர். அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உயர்நிலைப்பட்டம் பெறுவது மட்டுமே அவருடைய நோக்கமாக இருந்ததில்லை. இந்தியாவில் ஆங்கில மொழியுடன் பெர்சி மொழியையும் படித்து பி.ஏ.பட்டம் பெற்றதைப் போன்று அமெரிக்காவில் அரசியல், விஞ்ஞானம். நீதியியல், தத்துவம், மானிடவியல், சமூகவியல், பொருளாதாரம் ஆகியதுறைகளிலும் படிப்பதற்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்த பின் சிறப்பான மதிப்பிற்கரிய இனியவெற்றிகிடைத்தது.

ஆய்வுக்கான கட்டுரையை ஏற்றுக்கொண்டு கொலம்பியா பல்கலைக் கழகம் தத்துவவியல் டாக்டர் (Doctor of Philosophy) என்ற பட்டத்தை அதிகாரப் பூர்வமாக அம்பேத்கர் அவர்களுக்கு வழங்கியது.

அம்பேத்கர் அவர்கள் 1916 ஜூன் மாதம் அமெரிக்காவை விட்டுப் புறப்பட்டார். சில நாட்கள் பயணத்தில் கழிந்தபின் இலண்டன் நகரை அடைந்தார். உடனடியாக 1916 அக்டோபர் மாதத்தில் சட்டம் பயிலுவதற்காகக் ‘கிரேஸ் இன்”சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். பொருளாதாரம் மற்றும் அரசியல் விஞ்ஞானத்திற்கான சிறப்பு வாய்ந்த இங்கிலாந்து கல்லூரியில் பொருளாதாரம் பயில அந்தக் கல்லூரியில் சேர்ந்தார்.

இந்தச் சூழ்நிலையில் கல்வி உதவித் தொகைக்கான காலம் முடிந்து விட்டது என்று பரோடா மன்னர் அறிவித்ததால் தாய் நாடு திரும்பவேண்டிய கட்டாயம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது. தாராள மனங்கொண்ட இங்கிலாந்து பேராசிரியர் எட்வின் கன்னான் அவர்கள் பரிந்துரையின்பேரில் 1917 அக்டோபர் மாதத்திலிருந்து நான்கு ஆண்டுகள் முடிவதற்குள் மீண்டும் அவருடைய படிப்பைத் தொடருவதற்கான அனுமதியை இலண்டன் பல்கலைக் கழகத் திலிருந்து பெற்றுக்கொண்டார்.

இலண்டனில் தன் படிப்பை முடிக்க வேண்டும் என்ற அடங்காத விருப்பம் அவர் உள்ளத்தில் இருந்து கொண்டே இருந்தது. இதை எப்படியும் அடைந்தே தீருவது என்று தீர்மானித்தார். நல்லெண்ணம் கொண்ட ஒரு பார்சி நண்பர் வழியாக பம்பாயில் இரண்டு மாணவர் களுக்குப் பாடம் கற்றுத்தரும் வாய்ப்பு அவருக்குக் கிட்டடியது. இருப்பு மட்டும் பங்கு மார்க்கெட் பற்றிய வணிகத்தில் இருப்பவர்களுக்கு ஆலோசனை கூறும் வணிக நிறுவனம் ஒன்றையும் அதே நேரத்தில் தொடங்கினார். ஆலோசனை கூறும் வணிக நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு தீண்டப்படாதவர் என்று வாடிக்கையாளர்களுக்குத் தெரிந்து விட்டது. எனவே இவர் இதையும் மூடும் நிலை ஏற்பட்டது. அதன்பின் சிலகாலம் ஒரு பார்சி முதலாளியிடம் கடிதம் போக்கு வரத்து மற்றும் கணக்கு எழுதும் வேலையைக் கவனித்து வந்தார்.

1920 ஜூலை மாதம் சட்டப்படிப்பையும், பொருளாதாரப் படிப்பையும் முடித்திட வேண்டும் என்ற இலட்சியத்துடன் இலண்டனுக்கு பயணமானார். லண்டனில் கல்வியில் கவனம் செலுத்தி படிக்கத் தொடங்கினார். 1920 செப்டம்பரில் இலண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் விஞ்ஞானக் கல்லூரியில் பொருளியல் கல்வியை அம்பேத்கர் தொடர்ந்தார். இப்பொழுது அவருடைய கவனம் அருங்காட்சியகத்தின் பக்கம் திரும்பியது. காலை 8மணி முதல் மாலை 5மணி வரை படிப்பது என்பது அம்பேத்கரின் இலண்டன் வாழ்நாளில் அடிக்கடி நிகழ்ந்தது.

மேலும் அம்பேத்கர் பாரிஸ்டர் பட்டத்தை இலண்டனில் பெற்றார். இத்துடன் அறிவியலில் இலண்டன் பல்கலைக்கழத்தில் டாக்டர் பட்டம், பான் பால்கலைக்கழகத்தில் கற்ற கல்வி ஆகியவை அம்பேத்கருக்கு அணிசேர்த்தன. முழு தகுதிவாய்ந்த வழக்கறிஞர் ஆனார். இந்தியாவில் உள்ள பொருளாதார சமூகவியல் அறிஞர் களுக்கு அறைகூவல் விடுமளவிற்குச் சிறந்த வல்லுனரானார். இத்தகுதிகளுடன் இந்திய அரசியல் களத்தில் புயலென நுழைந்தார் அம்பேத்கர்.

சுதந்திர இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு சட்ட வரைவு குழுத் தலைவராக 1947 ஆகஸ்ட் 29 ஆம் நாள் நியமிக்கப்பட்டார்.

அந்தக்குழுவில் உறுப்பினர்களாக கோபால்சாமி அய்யங்கார், மாதவ்ராவ், சையதுமுகமது சாதுல்லா, அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, டி.டி.கிருஷ்ணமாச்சாரி போன்ற மிகப்பெரிய சட்ட மேதைகள் எல்லாம் இடம் பெற்று இருந்தார்கள். இவர்களெல்லாம் ஒருங்கிணைந்து 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு, 165 நாட்கள் சபையின் கூட்டத்தை நடத்தி அதில் 114 நாட்கள் வரைவு அரசியல் சட்டம் தொடர்பாக முக்கிய வாதங்களுக்கும், திருத்த தீர்மானங்களுக்கும் செலவிட்டனர். மொத்தம் 7635 திருத்த தீர்மானங்கள் தாக்கல் செய்து, அவற்றுள் 2473 தீர்மானங்கள் விவாதித்து பைசல் செய்யப்பட்டன. பிரிட்டனில் நடைமுறையில் உள்ள அரசியல் சட்டத்தை அடிப்படையாக வைத்து, நம் பாரத தேசத்திற்கு அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளில் உள்ள அரசியல் சட்டங்களில் சில நம் தேவைக்கேற்ப சேர்க்கப்பட்டன. இப்படி அம்பேத்கரும், அவரது குழுவும் அயராத உழைப்பால், இந்தியாவினுடைய அரசியல் சாசனத்தை எழுதிமுடித்தார்கள்.

1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள், நம் இந்தியப் பாராளுமன்றத்தில், தாம் தயாரித்து எழுதப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை, ஆங்கிலத்திலும் இந்தியிலுமாக இரண்டையும் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் தாக்கல் செய்தார்.

அது மாத்திரமல்ல, எல்லா மதத்தை கடுமையாக சாடினார். மனித குல வரலாற்றை சற்று திருப்பி பார்த்தோமேயானால், வரலாறு முழுவதும் மதம் என்பது தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதனை உயரமுடியும் என்றார்.

அடுத்தவர்களை சுரண்டவதற்காகவும், பலரை ஏய்த்திடவும்தான் மதம் பயன் படுத்தப்பட்டிருக்கிறது.

சிலர் தங்கள் மாச்சர்யங்களை மறைத்திடவும், தாங்கள் இழைத்த கொடுமைகளை நியாயப்படுத்தவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சிலர் அதிகாரங்களை கைப்பற்றிடவும் பிறர் மீது ஆதிக்கம் செலுத்திடவும் பாமரர்களை ஏய்திடவும் மதத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மதத்தின் பெயரால் பல அநீதியான போர்கள் நடந்தேறியிருக்கிறது. சிந்தனை சுதந்திரமும் மனசாட்சிப்படி செயலாற்றிடும் சுதந்திரமும் பறிக்கப்பட்டு, விஞ்ஞானிகள் பலர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

மதத்தின் பெயரால் மனிதனின் அடிப்படை சுதந்திரம் அனதை;தும் நசுக்கப்பட்டு, மனிதனின் கண்ணியமும் சுயமரியாதையும் தகர்த்தெறியப்பட்டிருக்கிறது.

மதத்தின் பெயரால் மனிதர்கள் செய்த பித்தலாட்டங்கள் மனித இனத்திற்கு எண்ணற்ற இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பரந்துபட்ட உலகில் எண்ணற்ற மதங்கள் இருக்கின்றது. அவைகள் ஒவ்வொன்றும் “தாமே உண்மையான மதம் என்றும், இறைவனிடமிருந்தும் அல்லது இறைவனே மனிதனுக்கு வழிகாட்ட வந்தது” என்று கூறுகிறது. அப்படிப்பட்ட மதம் மனிதனுக்கு வழிகாட்ட வந்தது என்பது உண்மையானால், மனிதர்களுக்குள்ளே ஏன் இந்தத் தீண்டாமை, பிரிவினைகள்? 5000 ஆண்டுகளாக இந்த மதம் என்ன சாதனையைச் செய்தது? மனிதர்களுக்குள்ளே பிரிவினைகளையும், சாதித் தீண்டாமையையும் உண்டாக்கியது தான் அதன் சாதனையாக இருந்துவந்திருக்கிறது.

இன்றைக்கு குறிப்பாக நம் தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டோமேயானால் திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம் போன்ற ஆதீனங்கள் ஏற்படுத்தப் பட்டதின் நோக்கம் தமிழையும் சைவத்தையும் வளர்த்தெடுப்பது மாத்திரமல்ல அல்ல. சாதிப்பாகுபாடுகள் கலைந்து மனிதனை மனிதனாக ஆக்குவதும், மனிதனுக்கு நல் வழிகாட்டுவதும் தான் அவற்றின் நோக்கம்.
நமக்கு வழிகாட்ட வந்த மதங்கள் சரியாகத்தான் இருக்கின்றன. வழிகாட்டிகள் சரியாக இல்லாததால் தான் தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்டவாகவும், பிற்படுத்தப்பட்டவன்; பிற்படுத்தப் பட்டவனாகவும்;, ஒடுக்கப்பட்டவன் ஒடுக்கப்பட்டவனாகவும் இருப்பதற்கு காரணம்.

இதற்குத்தான் அண்ணல் அம்பேத்கர்; “மதம் என்பது மனிதனுக்காக, அவனை நல்வழிப்படுத்த, பிரிவினைகளையும் தீண்டாமையையும் கலைந்தெடுக்க. மாறாக மதத்திற்காக மனிதன் படைக்கப்படவில்லை” “Religion is for man…… and not man for religion ” என்றார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு… அவரது நேரடி உதவியாளர் நம் அண்டை மாநிலமான கேரளத்தைச் சார்ந்த எம்.ஓ. மத்தாய். நேருவின் மறைவிற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு “நேரு காலத்து நினைவுகள்” என்ற புத்தகத்தை எழுதினார். அதில் மத்தாய் ஒரு முக்கியச் செய்தியைக் குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது “ டாக்டர் அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்து பதவி விலகிய பின் 1952 ஆம் வருடம் என்னுடைய இல்லத்திற்கு வந்து நீண்ட நெடிய நேரம் என்னிடம் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார் அப்போது அவர் “நம் நூற்றாண்டின் மாபெரும் இந்தியர் சுவாமி விவேகானந்தர். இந்த மகத்தான மாமனிதரில் இருந்து தான் நம் “நவ இந்தியா” ஆரம்பிக்கிறது” என்று கூறினார். இவ்வாறு மத்தாய் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அப்படி அம்பேத்கர் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்ட சுவாமி விவேகானந்தர் தனது சொற்பொழிவில், “பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாட்களாக இறுகப் பற்றிக்கொண்டு இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து நாகரீகத்தை அழித்து எத்தனையோ நாடுகளை நிலைகுலைய செய்து விட்டன. அந்த கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால், மனித சமுதாயம் இன்று இருப்பதைவிட பலமடங்கு உயர் நிலையை எய்தியிருக்கும்.

ஆக, மதம் என்பது வானவில்லைப்போல கோடுகளைத் தீட்டிக்கொண்டு கோவிலுக்குச் செல்வதல்ல. மதம் என்பது யாருமற்ற அனாதைக்கும் ஏழைகளுக்கும், தாழத்தப்பட்ட படித்திராத பாமரமக்களுக்கும், அவ்வளவு ஏன் அனைத்து உயிர்குலங்கள் மீதும் அன்பும் தயையும் கருணையும் கொண்டு சேவை செய்வது தான் மதம். அதேபோல, சாதி என்பது சமூக ஏற்பாடு… வேதாந்த மதத்திற்கு விரோதமானது. நம் பலங்கால இந்தியாவின் அரசியல் அமைப்புக்களிலிருந்து வளர்சி பெற்றது தான் சாதி.” என்று சுவாமி விவேகானந்தர் கூறினார்.

அவர் சொன்னதைப்போல 5000 ஆண்டுகளாக மதத்தின் பெயரால் இருந்துவந்த நம் பலங்கால இந்தியாவின் அரசியல் அமைப்புக்களிலிருந்து வளர்சி பெற்ற சாதித் தீண்டாமை என்னும் சழக்கை, யாரைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைத்து, இந்த பாரத தேசம் பல இன்னல்களைக் கொடுத்ததோ, கல்வியைத் தர மறுத்ததோ, அதே அம்பேத்கரால் பரந்து பட்ட இந்த பாரத தேசத்திற்கு, அரசியல் சட்டத்தை உருவாக்குகிற வாய்ப்பு கிட்டியது என்றால் அது காலத்தின் கட்டாயம்.

அண்ணல் அம்பேத்கர் கல்வியறிவை மட்டும் பெற்றுவிடவில்லை யென்றால் யுகயுகமாய் அடிமையாய்க் கிடந்த நாம் அடிமையாகவே இருந்திருப்போம். வேறு எந்த ஒரு மாற்றமும் இந்த மண்ணில் நிகழ வாய்ப்பற்று போயிருக்கும்.

“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திர சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே….

நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்ற கலைச்சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே”

ஆச்சாரம் அனுஸ்டானம், வர்ணங்கள் இவையெல்லாம் சிறு பிள்ளைத்தனமான விளையாட்டு. இதை பெரிதாகக் கருதி காலம் காலமாய் மக்களை அடிமைபடுத்தியிருக்கிறீர்களே என்று வடலூர் வள்ளலார் இராமலிங்கசுவாமிகள் திருவருட்ப்பாவில் சொன்னத் தீண்டாமைக் கொடுமையை, அவர் கண்ட கனவை சட்டமாக்கி காட்டியவர் அண்ணல் அம்பேத்கர்.

தீண்டாமையைச் சொல்லி சொல்லியே காலம் காலமாக கல்வி மறுக்கபட்டு வந்தது. இத்தனையும் மீறி அண்ணல் அம்பேத்கர் கல்வி கற்றதனால் தான் இன்றைக்கு பள்ளத்தில் வீழ்ந்து கிடந்தவரெல்லாம் விழிப்புணர்வு பெற்ற வீறு கொண்டு எழுந்திருக்கிறார்கள். இதைத்தான் பாரதி சொல்வான்.

பயிற்றிய பல கல்வி தந்து
இந்தப் பாரை உயர்த்தி;ட வேண்டும்
வெள்ளம் போல கவிப்பெருக்கும்
கலைப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிப்பெற்றுப் பதவி கொள்வார்.

அண்ணல் அம்பேத்கர் கற்ற கல்வி இந்த தேசத்தையே தலை நிமிர்த்தியிருக்கிறது. இன்றைக்கு தாழ்த்தப்பட்வர்கள் பலர் மருத்துவராக, பொறியாளராக, வழக்கறிஞராக, நீதிபதிகளாக, அமைச்சர்களாக, குடியரசுதலைவராக, மற்றும் இன்னும் பல உயரிய பதவிகளில் அங்கம் வகிப்பதற்கு காரணம்…… காலம் காலமாக இருந்த வந்த மனு சட்டத்தை உடைத்தெறிந்து இந்த பாரத தேசத்திற்கு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தவர் அண்ணல் அம்பேத்கர் என்பதை நாம் யாரும் மறந்து விடக்கூடாது.

அண்ணல் அப்பேத்கர் வெறும் கற்றறிந்த அறிவுஜீவியாக மட்டுமே இருந்திருந்தால், கோடிக்கனக்கான மக்களால் நினைத்துப் பார்க்கப்படும் அளவிற்கு மாமனிதராக வந்திருக்க முடியாது. அவர் கற்ற கல்விக்கு ஏற்ப ஏதோ ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருந்து கொண்டு, இரண்டு மணிநேரம் அல்லது மூன்று மணிநேரம் மட்டுமே வகுப்பு எடுத்துவிட்டு, தன் பதவிகாலம் முடிந்ததற்கு பின்னால், சாய்வுநாற்காலியில் அமர்ந்து கொண்டு பேரக்குழந்தைகளோடு விளையாடி மகிழ்ந்திருக்கலாம். தொலைக்காட்சியில் வரும் நாடகங்களை பார்த்துக்கொண்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கலாம். வந்த ஓய்வுத் தொகையை வங்கியில் வைப்புத்தொகையாக வைத்துக்கொண்டு வாழ்வாங்கு வாழந்திருக்கலாம். நேரத்திற்கு விதவிதமான உணவுப் பதார்த்தங்களை உண்டு அருகாமையில் உள்ளவர்களிடம் பழங்கதைகள் பேசிக்கொண்டு காலத்தை ஓட்டியிருக்கலாம்.

பாரதி சொன்னதைப்போல,

தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கு இரை எனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே…. அம்பேத்கர் அவர்களும் வாழந்திருக்கலாம்.

ஆனால் அண்ணல் அம்பேத்கர் படித்தது வெறும் ஏட்டுக்கல்வி மாத்திரமல்ல, இந்த சமுகத்தையும் மக்கள் உளவியளையும் சேர்த்துப்படித்தார். சுவாமி விவேகானந்தர் உண்மையான கல்வி எது என்பதற்கு விளக்கம் சொல்லும் போது, “கேட்கும் மனிதனின் வாழ்க்கையை வளப்படுத்துவதும், மனிதனை உருவாக்குவதும், குணத்தை மேம்படுத்துவதும், கருத்துக்களை எளிதில் ஜீரணம் செய்யத்தக்கதும் தான் கல்வி. அதுமட்டுமல்ல சராசரி மக்களை அன்றாட வாழ்க்கை போராட்டத்திற்கு தயார் செய்கிற, ஒழுக்க வலிமையை தரக்கூடிய, பிறர் நலத்தை நாடுகிற உணர்வைத் தரக்கூடிய, சிங்கம் போன்ற தைரியத்தைக் கொடுக்கக் கூடிய கல்வி தான் உண்மையானக் கல்வி என்றார்.

இந்தக் கல்வியைத் தான் அண்ணல் அம்பேத்கர் பயின்றார். பணத்திற்காகவோ, பட்டத்திற்காகவோ, பதவிக்காகவோ, அவர் படிக்கவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், மனிதர்கள் மனிதர்களாக மதிக்கப் படவேண்டும் என்பதற்காகப் படித்தார்.

மனிதர்களை மதிக்கதாத மதத்தை கண்டித்தார். “மதம் சமத்துவத்தை வளர்க்க வேண்டும்….. அடிமைத்தனத்தை அல்ல! தன்னை பின்பற்றுபவர்களையே கடையனாக்கித் தண்டிக்கிற அமைப்பு எப்படி மதமாக இருக்க முடியும்?” என்றார்.

இப்படி தன் வாழ்நாள் முழுவதும் மதத்தையும் தீண்டாமைக் கொடுமையையும் கண்டு கொதித்தெழுந்து I like the religion that teaches liberty equality and fraternity சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றை போதிக்கும் மதத்தையே நான் விரும்புகிறேன் என்றார்.

அதுமட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கர் இந்திய ஜனநாயகம் என்ற அம்சத்தின் மீது ஆழமான நம்பிக்கையும் மதிப்பும் கொண்டிருந்தார். ஆனால் அந்த ஜனநாயகம் அரசியலில் மட்டும் இருந்தால் போதாது, சமூக ஜனநாயகமும் முக்கியமானது என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அதுமட்டுமல்ல அண்ணல் அம்பேத்கர் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட இன மக்களின் சலுகைகளுக்காகவும் நலனுக்காகவும் மட்டுமல்ல…… மாறாக ஜனநாயகத்துக்கும், அறிவியலுக்கும், மனிதநேயத்திற்கும், இயற்கைக்கும் மாறானதுமான சாதீய அமைப்புப் போராட்டங்கள்.

இதுவெல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை, இன்றைய இளைஞர்கள் அம்பேத்கர் போன்ற புரட்சியாளர்கள் வாழ்க்கை வரலாற்றை படித்து இருந்தால், கஞ்சாவுக்கும் மதுவுக்கும் அடிமையாகி இருக்க மாட்டார்கள். திரைப்பட கொட்டகையை ஆக்கிரமித்து அடிமையாகி போய் இருக்க மாட்டார்கள். திரைப்பட கொட்டகைகள் என்பது மனதில் உள்ள மலத்தை கழிக்கும் இடம், அங்கே சென்று மலம் கழிக்க வேண்டுமே தவிர அந்த அசிங்கத்தை அள்ளி கொண்டு வரக்கூடாது என்பதை உணர்ந்திருப்பார்கள். ஒரு தலைவனை புத்தகத்தின் வாயிலாக தேட வேண்டுமே தவிர திரைப்படங்களில் தேடக் கூடாது என்று அறிந்து வைத்து இருப்பார்கள். பித்து பிடித்தவர்கள் போல நடிகர்களின் பின்னால் சென்று தங்கள் வாழ்வை தொலைத்திருக்க மாட்டார்கள்

எனவே அண்ணல் அம்பேத்கர் அவர்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிடாமல் இந்த தேசத்தின் சொத்தாகக் கருதி…. அவர் சொன்ன தாரக மந்திரமான, “எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள், எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பளியுங்கள், எனக்கு மேலே ஒருவரும் இல்லை: எனக்கு கீழே ஒருவரும் இல்லை என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்.” புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்று கூறி

வாழ்க அண்ணல் அம்பேத்கரின் புகழ்…!
வளர்க அவரின் நற் சிந்தனை..!

                                     'திருக்குறள் இளம் புலமையர்" கே.பி.ரோகித்கணேஷ் (சொற்பொழிவாளர், கட்டுரையாளர்)

145, மின்னப்பன் தெரு,
உறையூர், திருச்சி 620003
செல் : 9894969558