July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சியில்

சர்வதேச மகப்பேறு அவசர சிகிச்சை மாநாடு தொடக்கம் :

திருச்சி ஜூலை 13-

திருச்சி மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் சங்கம் சார்பில், இந்திய மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவுடன், சர்வதேச மகப்பேறு அவசர சிகிச்சை மாநாடு திருச்சி கிரிஸ்டல் கன்வென்ஷன் சென்டரில் தொடங்கியது.
இந்த இருநாள் மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 700-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், மயக்கவியல் நிபுணர்கள், அவசர சிகிச்சை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர்.
மாநாட்டில் மாநாட்டு தலைவர் டாக்டர் சார்மிளா அய்யாவு வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து, மாநாட்டின் நோக்கங்களை விளக்கி, தாய் உயிரிழப்புகளைத் தடுப்பதில் பல்துறை மருத்துவக் குழுவின் ஒருங்கிணைந்த செயல்பாடு, தகுந்த நேரத்தில் நோயறிதல் மற்றும் சான்றுகளின் அடிப்படையிலான சிகிச்சை முறைகளின் அவசியத்தை வலியுறுத்தினார். முடிவில் மாநாட்டு ஏற்பாட்டுச் செயலாளர் டாக்டர் விஜயபிரபா செழியன்
நன்றி கூறினார்.
மாநாட்டை அமைப்பின் தலைவர் டாக்டர் பாஸ்கர் பால் தொடங்கி வைத்து உரையாற்றினார். உலகளவில் தாய் இறப்புகளை குறைப்பதில் மருத்துவர்களின் தொடர்ச்சியான பயிற்சி, அவசரநிலை மேலாண்மை திறன் மற்றும் குழு ஒருங்கிணைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக அவர் கூறினார். ஒவ்வொரு தாயின் உயிரும் விலைமதிப்பற்றது என்பதால், தவிர்க்கக்கூடிய தாய் இறப்புகளை பூஜ்ஜியமாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மாநாட்டில் முன்னாள் தலைவர் பேராசிரியர் சபாரத்னம் அருள்குமரன் பேசினார்.
பொதுச் செயலாளர் டாக்டர் சுவர்ணா காதில்கர் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் வித்யா தோப்பி ஆகியோர் மருத்துவக் கல்வி, செயல்முறைப் பயிற்சி மற்றும் அறிவியல் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பேசினர்.
மாநாட்டில் மகப்பேறு அவசரநிலைகள், பிரசவத்திற்குப் பிந்தைய அதிக இரத்தப்போக்கு, கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம், மகப்பேறு செப்சிஸ், கர்ப்பகால அதிர்ச்சி நிலைகள், சுவாச மேலாண்மை, வென்டிலேட்டர் சிகிச்சை, மேம்பட்ட உயிர்காக்கும் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்.
மேலும், நேரடி செயல்விளக்கப் பயிற்சிகள் ஆகியவை நடத்தப்பட்டு, அவசரகால மகப்பேறு சிகிச்சையில் மருத்துவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த
மாநாட்டில்தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.