June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா தலைமையில்புதுச்சேரி மாநில திமுக மாணவரணிநிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பத்திரிகை செய்தி

புதுச்சேரி மாநில திமுக மாணவர் அணி நிர்வாகிகள் மற்றும் தொகுதி மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 07.06.206 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநில கழக அமைப்பாளர், மேனாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில மாணவர் அணிச் செயலாளர் திருமிகு. வீரமணி ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு மாநில மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.பி. மணிமாறன் முன்னிலை வகித்தார்.

இதில் அவைத்தலைவர் எஸ்.பி. சிவகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில் (எ) ரமேஷ், விக்னேஷ் கண்ணன், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் லோகையன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், சக்திவேல், வேலன், சண்முகம், மயகிரிஷ்ணன், அமுதா குமார், நர்கிஸ், மற்றும் தொகுதிக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மாநில மாணவரணி நிர்வாகிகள் கண்ணன், அமுதன், ஸ்டீபன் ராஜ், ஸ்ரீஹரி, தமிழ்மகள் ஜான்சி, முத்தரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


திமுக மாணவரணி ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1
புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் (CENTAC) மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகை மற்றும் நிதியுதவித் திட்டங்களின் நிலுவைத் தொகைகள்2022 ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ளது. எனவே, பயனாளி மாணவர்களின் எண்ணிக்கை, ஆண்டு வாரியான நிலுவைத் தொகை, இதுவரை வழங்கப்பட்ட தொகை ஆகியவற்றை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை (White Paper) உடனடியாக வெளியிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. அத்துடன் புதுச்சேரி அரசு இவ்வாண்டு காலத்துடன் சென்டக் மாணவர் சேர்க்கையை முடித்து அனைவர்க்கும் கல்வி உதவித்தொகை வழங்குவதுடன் வெளி கல்லூரிகளில் தொழிற்படிப்பு சேரும் மாணவர்களுக்கும் முறையாக கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்மானம் 2
மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்காக ஒன்றிய அரசின் சார்பில் நடத்தப்படும் நீட் (NEET) தேர்வில் தொடர்ந்து பல்வேறு குளறுபடிகள், முறைகேடுகள் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. நீட் தேர்வில் கசிவு மற்றும் ஒன்றிய அரசுத் தேர்வுகளில் நடந்து வரும் முறைகேடுகள் ஆகியவைகளை கண்டித்து இன்று இந்திய அளவில் மாணவர்களும்-இளைஞர்களும் இணைந்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்து நீட் தேர்வின் தோல்வியை எதிரொலிக்கிறது. அனிதா போன்ற நூற்றுக்கணக்கான மாணவர்களின் உயிர்களை பலிவாங்கிய நீட் தேர்வை இன்றிலிருந்தாவது ஒன்றிய அரசு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அதற்கு புதுச்சேரி அரசு அழுத்தம் கொடுக்கவேண்டுமென்றும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3
இந்தி மற்றும் சமஸ்க்ரித மொழிக்கு முக்கியத்துவம் அளித்தும், பின்தங்கிய சமூக மாணவர்களை கல்விநிலையங்களில் இருந்து வெளியேற்றும் வகையிலும் ஆர்.எஸ்.எஸ் ஆல் முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய கல்வித்திட்டத்தை புதுவை அரசு முழுமூச்சில் நிறைவேற்றுவதை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 4
புதுச்சேரியின் மொழியாக பிரென்ச் திகழ்ந்து வரும் நிலையில் அதனை தடை செய்யும் ஒன்றிய அரசின் ஆணையை புறக்கணித்து முன்பிருந்த நிலையிலேயே பிரென்ச் மொழி புதுச்சேரி பள்ளி கல்லூரிகளில் பின்பற்ற புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க இக்கூட்டம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5
புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு முறையாக மாணவர்களை பயிற்றுவிக்காமல் பல பள்ளிகளில் காப்பியடிக்கும் நிலையை கல்வித்துறையே ஊக்குவித்தது அனைவரும் அறிந்ததே. ஆகவே ஆசிரியர்களுக்கு தொடர் திறன் பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்மானம் 6
ஆரம்ப கல்வி முதல் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது தொடர்கதையாக உள்ளது. ஆகவே ஆண்டு துவக்கத்திலேயே போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 7
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீட்டை முறைப்படுத்த பல்கலைக்கழகத்திற்கு புதுச்சேரி அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தீர்மானம் 8
புதுச்சேரி கல்வித்துறையிலிருந்து விளையாட்டை ஊக்குவிக்க அதற்க்கான தனித்துறை துவங்கப்பட்டும் அதற்க்கான உருப்படியான எந்தத்திட்டத்தையும் இவ்வரசு முன்னெடுக்கவில்லை. ஆகவே விளையாட்டை மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள புதுச்சேரி அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.