July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பி.பி.எல். கிரிக்கெட்கேப்டனின் அதிரடி ஆட்டத்தால் ஊசுடு அணி அபார வெற்றி!

புதுச்சேரி, ஜூலை. 9–

பி.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நேற்று முன்தினம் துத்திப்பட்டு சீக்கேம் மைதானத்தில் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

நேற்று மதியம் 2 மணிக்கு நடந்த 2-வது லீக் போட்டியில் ஜெனித்ஏனாம் ராயல்ஸ்–ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஏனாம் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஒயிட் டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்தது. ஒயிட் டவுன் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்ததால் ரன்வேகம் தடைபட்டது. நெயன் காங்கேயன் (11), ஆயுத் சர்மா (9), பரத் ராவத் (1) அடுத்தடுத்து வெளியேறி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய சிவ சுபாஷ் 12 பந்துகளில் (5 சிக்சர், 1 பவுண்டரி) 38 ரன்கள் எடுத்தார். தர்ஷன் ராஜகோபால் தனது பங்குக்கு 46 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஏனாம் அணியில் பிரனாய்சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஏனாம் ராயல்ஸ் அணி 15.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 157 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக மட்டையை சுழற்றிய எஸ். பரமேஸ்வரன் 25 பந்துகளில் (6 பவுண்டரி, 5 சிக்சர்) 66 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

மாலை 6 மணிக்கு நடந்த 3-வது லீக் போட்டியில் ஊசுடு அணியும், காரைக்கால் நைட்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த காரைக்கால் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து விளையாடிய ஊசுடு அணி 17.1 ஓவரில் 5 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 31 பந்துகளில் 68 ரன்கள் (3 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி வெற்றிக்கு வித்திட்ட ஊசுடு அணியின் கேப்டன் சாகர் திருவேதிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.