June 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மத்தூரில் போலியோ சொட்டு மருந்து தட்டுப்பாடு:

தவெக நிர்வாகிகள் தலையீட்டால் உடனடி தீர்வு!

மத்தூர், ஜூன். 28:
கிருஷ்ணகிரி மாவட்டம்,
மத்தூர் பகுதியில் போலியோ சொட்டு மருந்து தீர்ந்துவிட்டதால், நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அதிகாரிகளுடன் பேசி உடனடியாக மருந்துகளை வரவழைத்து வழங்கினர்.
நாடு முழுவதும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, மத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் மத்தூர் பேருந்து நிலையத்தில் இதற்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இம்மையங்களில் காலை முதலே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆர்வத்துடன் வந்து சொட்டு மருந்து செலுத்திச் சென்றனர்.
இந்நிலையில், மதிய வேளையில் திடீரென சொட்டு மருந்து கையிருப்பு தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெற்றோர்களும் குழந்தைகளும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
இந்த தகவல் அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மத்தூர் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி அமைப்பாளர்கள் உடனடியாக சொட்டு மருந்து மையங்களுக்கு விரைந்து வந்தனர். அங்கு பொதுமக்களின் சிரமத்தை நேரில் கண்டு, உடனடியாகச் சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசினர்.
மருந்துகள் தீர்ந்துவிட்டதைச் சுட்டிக்காட்டி, போர்க்கால அடிப்படையில் புதிய மருந்துகளைக் கொண்டு வர வலியுறுத்தினர். நிர்வாகிகளின் உடனடி முயற்சியால், சில நிமிடங்களிலேயே கூடுதல் மருந்து பாக்கெட்டுகள் மையங்களுக்கு வந்து சேர்ந்தன. இதனையடுத்து, காத்திருந்த குழந்தைகளுக்கு தவெக நிர்வாகிகள் முன்னிலையில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
பொதுமக்களின் துயரத்தை உணர்ந்து, மனிதாபிமானத்தோடு விரைந்து செயல்பட்டு தட்டுப்பாட்டைப் போக்கிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் இந்தச் செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.