July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

போச்சம்பள்ளி அருகே உள்ள செல்லம்பட்டி கிராமத்தில் கள்ளத்தொடர்பு விவகாரம்: கணவருக்கு விஷம் வைத்துக்கொன்றதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியல்!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த செல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்முருகன் (42). இவர் வேலம்பட்டி கிராமத்தில் கறிக்கோழி்க்கடை நடத்தி தனது குடும்பத்தைக் கவனித்து வந்தார். இவருக்கு சசிகலா (28) என்ற மனைவியும், இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளும் உள்ளனர்.

நேற்று (17.07.2026) காலை 11 மணி கடந்தும் அருள்முருகன் வீட்டை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த உறவினர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர் இதுகுறித்து நாகரசம்பட்டி காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அருள்முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டினம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
சந்தேகம் அடைந்த உறவினர்கள் சாலை மறியல்: இதற்கிடையில், அருள்முருகனின் மனைவி சசிகலாவிற்கும் தட்டக்கல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அருள்முருகனுக்கு உணவில் விஷம் கலந்து கொலை செய்திருக்கலாம் என அவரது உறவினர்கள் பலத்த சந்தேகம் எழுப்பினர்.

பிரேத பரிசோதனை முடிந்து அருள்முருகனின் உடல் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டபோது, ஆத்திரமடைந்த உறவினர்கள் உடலை வாங்கி போச்சம்பள்ளி – அகரம் சாலையின் நடுவே வைத்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த நாகரசம்பட்டி போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரின் சமரசத்தை ஏற்று உறவினர்கள் கலைந்து சென்றதைத் தொடர்ந்து, அருள்முருகனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்