புதுச்சேரி, பிப். 03:
புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்து காவல்துறையினர் டாக்ஸி மற்றும் சரக்கு வாகனங்களை மட்டும் குறிவைத்து அதிக அபராதம் விதித்து வருவதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. யு. லட்சுமிகாந்தன் அவர்களிடம் டாக்ஸி ஓட்டுநர்கள் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
உதவும் கரங்கள் ஓட்டுநர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட அந்த மனுவில் ஓட்டுநர்கள் கூறியிருப்பதாவது:
முருங்கப்பாக்கம் முதல் அரியாங்குப்பம் வரை மற்ற வாகனங்களை விட டாக்ஸி மற்றும் லோடு வாகனங்களுக்கு மட்டுமே 30 கி.மீ வேகக் கட்டுப்பாடு என்ற பெயரில் அபராதம் விதிக்கப்படுகிறது.
அரியாங்குப்பம் சிக்னல் மற்றும் கன்னி கோயில் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்ய வேண்டிய காவலர்கள், ஓட்டுநர்களைப் புகைப்படம் எடுத்து அபராதம் விதிப்பதையே முழுநேர வேலையாகக் கொண்டுள்ளனர்.
‘ஒயிட் போர்டு’ எனப்படும் சொந்த உபயோக வாகனங்களைச் சட்டவிரோதமாக வாடகைக்கு விடுவதாலும், வெளிமாநில வாகனங்களின் ஆதிக்கத்தாலும் உள்ளூர் ஓட்டுநர்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர்.
ஓலா மற்றும் ஊபர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் குறைந்த வாடகை நிர்ணயம் செய்வதால், பல போராட்டங்கள் நடத்தியும் அரசு இன்னும் டாக்ஸிகளுக்கான முறையான விலையை நிர்ணயம் செய்யவில்லை.
இது குறித்து சங்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் செயலாளர் யுவராஜ் கூறுகையில், “பல பட்டதாரி இளைஞர்கள் வேலை கிடைக்காமல் இந்தத் தொழிலை நம்பி இருக்கிறோம். எங்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. புதுச்சேரியில் சுமார் 2 லட்சம் ஓட்டுநர் குடும்பங்கள் உள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம்,” என எச்சரித்தனர்.
மனுவை ஏற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர், கிருமாம்பாக்கம் மற்றும் தெற்கு போக்குவரத்து காவல்துறையினரிடம் இது குறித்துப் பேசி உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்