July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுவை முத்தியால்பேட்டை பெரியபாளையத்தம்மன் தேவஸ்தான 106-வது ஆண்டு ஆடித்திருவிழா: இன்று நான்காம் நாள் நிகழ்ச்சி!

புதுச்சேரி, ஜூலை 20:

புதுச்சேரி முத்தியால்பேட்டை பெருமாள்பேட்டை வீதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் தேவஸ்தானத்தின் 106-ம் ஆண்டு ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் நான்காம் நாளான இன்று (ஜூலை 20), அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானமும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

இன்றைய திருவிழா நிகழ்வுகள் காலை 7.00 மற்றும் 11.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனையுடன் தொடங்கின. அதனைத் தொடர்ந்து மதியம் 12.00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

இவ்விழாவின் நான்காம் நாள் திருவிழா உபயத்தை N.முருகன் முதலியார் – சரோஜா குடும்பத்தினர் (LIC of India, Pondicherry), வரதவள்ளி மாரியம்மன் கோயில் தெரு அவர்கள் ஏற்றுச் சிறப்பித்துள்ளனர். இவர்களது ஏற்பாட்டின்படி, முத்தியால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் அவர்கள் தேவஸ்தான வாசலில் பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானத்தை வழங்கினார். திரளான பக்தர்கள் இந்த அன்னதானத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தொடர்ந்து மாலை 7.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட விமானத்தில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு முத்தியால்பேட்டை பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. தேவஸ்தான நிர்வாகத்தினரும் ஊர்ப் பொதுமக்களும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இந்நிகழ்வில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்று வருகின்றனர்.