சேலம் மாநகராட்சியில் அரங்கேறிய மோதல் – என்னை ஏன் பேசவிடல – தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்.
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் தொடங்கிய உடனேயே, சேலம் மாநகராட்சியில் குடிநீரை தனியார்மயமாக்கும் திமுவின் முடிவைக் கண்டித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதே சமயம், குடிநீர் தனியார்மயமாக்கலைக் கைவிட வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன் மேயர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்து, கூட்டம் முடியும் வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதற்கிடையில், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் இக்கூட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது, தவெக நிர்வாகிகள் அரசு அதிகாரிகளை நிர்பந்திப்பதையும், ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதற்குப் பதிலளித்த தவெக எம்.எல்.ஏ சிவக்குமார், சேலம் வடக்கு தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் மாமன்ற உறுப்பினர்கள் முறையாகப் பணிகளை மேற்கொள்வதில்லை என்றும், மக்கள் இதுகுறித்து நேரடியாகக் குற்றச்சாட்டுகளை வைப்பதாகவும் (குறிப்பாக 33-வது வார்டு பணிகள்) தெரிவித்தார்.
தவெக சட்டமன்ற உறுப்பினரின் இந்தக் குற்றச்சாட்டால் ஆத்திரமடைந்த திமுக மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிவக்குமாரிடம் விடாமல் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாமன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினர் தன்னைச் சூழ்ந்துகொண்டு தொடர்ந்து ரவுண்டு கட்டிய நிலையில், “என்னை ஏன் பேசவிடவில்லை?” என்று கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், பாதியிலேயே மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!