July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சி பேரூராட்சி அருகே பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத குளம் – மக்கள் கடும் அதிருப்தி; உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி அலுவலக கட்டிடத்தை ஒட்டி அருகில் அமைந்துள்ள பொதுமக்கள் பயன்பாட்டிற்கான குளம், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் இந்த குளம் உபயோகப்படுத்த முடியாத நிலை உள்ளது
ஒருகாலத்தில் மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதோடு, சுற்றுப்புற மக்களுக்கும் பயனளித்த இந்தக் குளம் தற்போது குப்பைகள் மற்றும் கழிவுகள் சூழ்ந்து பரிதாபமான நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, பேரூராட்சி நிர்வாக அலுவலகத்தின் கட்டிடத்தின் சுவர் அருகில் இந்தக் குளம் அமைந்திருந்தும், அதன் அவல நிலையை அதிகாரிகள் கவனிக்காமல் இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “அருகிலேயே உள்ள குளத்தையே பராமரிக்க முடியாத நிலை என்றால், பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு முன்னுரிமை அளிக்கப்படும்?” என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர்.
பல ஆண்டுகளாக பல்வேறு ஆட்சிகள் மாறியும், மக்கள் பிரதிநிதிகள் மாறியும், இந்தக் குளத்தை சீரமைக்கும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மழைநீர் சேமிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், தற்போதைய நிலையில் குளத்தில் தேங்கியுள்ள கழிவுகள் காரணமாக கொசுக்கள் பெருகி, டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகும் சூழல் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, குளத்தை முழுமையாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே செஞ்சி பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.