July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

காமராஜரின் எளிமை, நேர்மை, கல்விச் சேவை இன்றைய தலைமுறைக்கு வழிகாட்டி

மணப்பாறையில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் எம்.எல்.ஏ. ரா. கதிரவன் பேச்சு

மணப்பாறை, ஜூலை 15:

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான ரா. கதிரவன் தலைமையில் மணப்பாறை கோவில்பட்டி சாலையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சியினர், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய எம்.எல்.ஏ. ரா. கதிரவன், “பெருந்தலைவர் காமராஜர் என்பது ஒரு அரசியல் தலைவரின் பெயர் மட்டுமல்ல; நேர்மை, தியாகம், எளிமை மற்றும் மக்கள் நல ஆட்சியின் அடையாளமாக விளங்கிய மகத்தான தலைவர். ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையுடன் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை உருவாக்கியவர். கல்வியின் மூலம் சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை தனது ஆட்சியின் மூலம் நிரூபித்தவர் காமராஜர்.

அவரது ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மதிய உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. கிராமப்புறங்களிலும் கல்வி சென்றடைய பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனால் தான் மக்கள் அவரை ‘கல்வித்தந்தை’ என்று அன்புடன் அழைக்கின்றனர்.

கல்வி மட்டுமல்லாமல், தமிழகத்தின் வளர்ச்சிக்காக அணைகள், தொழிற்சாலைகள், சாலைகள், மின் உற்பத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி தொழில்துறை மற்றும் வேளாண் முன்னேற்றத்திற்கும் அடித்தளம் அமைத்தவர் காமராஜர். அதிகாரத்தில் இருந்தபோதும் ஆடம்பர வாழ்க்கையைத் தவிர்த்து, இறுதி வரை மக்களோடு மக்களாக வாழ்ந்த தலைவர் அவர்.

இன்றைய இளைஞர்கள் காமராஜரின் எளிமை, நேர்மை, ஒழுக்கம், கடமை உணர்வு மற்றும் மக்கள் சேவை மனப்பான்மையைப் பின்பற்றி சமூக முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும். காமராஜரின் வாழ்க்கை வரலாறு ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு பாடமாகும். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்” என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, விவசாய அணி அமைப்பாளர் மாயவன்,மாவட்ட பொருளாளர் ராஜேஷ், ஒன்றிய செயலாளர் மருங்காபுரி சேகர், வழக்கறிஞர் அணி பிரபாண்டியன், மணப்பாறை வடக்கு நகரக் கழகச் செயலாளர் கே.சி. திருப்பதி, தெற்கு நகரக் கழகச் செயலாளர் அ.அழகர், ஒன்றியச் செயலாளர்கள் பாண்டியன், பார்த்திபன், வெள்ளைச்சாமி, காயாம்பு, வையம்பட்டி சரவணன், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அன்பரசன், நகராட்சி கவுன்சிலர்கள் ராஜா, எத்திராஜ், ஆர்பர் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு காமராஜருக்கு மலரஞ்சலி செலுத்தினர்.