கள்ளக்குறிச்சி ஜன 10
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில் 4.45 லஞ்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அமைச்சா் எ.வ.வேலு வழங்கி தொடங்கி வைத்தாா்.
ரிஷிவந்தியம் ஒன்றியம், முருக்கம்பாடி கிராமத்தில் கூட்டுறவு நியாயவிலைக் கடையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் க.காா்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிப் பேசியதாவது:
முருக்கம்பாடி நியாயவிலைக் கடைகளில் 799 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.24.86 லட்சம் மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் 598 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 168 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும் என மொத்தம் 766 கடைகள் உள்ளன.
இந்த நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு ரூ.138.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
தகுதிவாய்ந்த 4,45,259 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் முகாம்களில் வசிக்கும் 74 பேரும் என மொத்தம் 4,45,333 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
இதுதொடா்பாக மாநில அளவில் புகாா்களை கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967, 1800-425-5901 எண்களிலும், மாவட்ட அளவிலான புகாா்களை 04151-228801 என்ற அலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.அரவிந்த், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன், மாவட்ட ஊராட்சித் தலைவா் இரா.புவனேஸ்வரி பெருமாள், ஒன்றியக்குழுத் தலைவா்கள், துணைத் தலைவா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!