June 15, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி: மினி லாரி வாடகை 15% உயர்வு – உரிமையாளர்கள் அறிவிப்பு

புதுச்சேரி, ஜூன் 14:
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை தொடர்ந்து, மினி லாரிகளின் இயக்கச் செலவு அதிகரித்துள்ளதால், தங்களது வாடகைக் கட்டணத்தை கூடுதலாக 15 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளதாக புதுச்சேரி மினி லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் சங்க நிர்வாகிகள் இதுகுறித்து கூறுகையில், இந்த புதிய வாடகை உயர்வு வரும் ஜூன் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, மினி லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை சமாளிக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

மேலும், இந்த வாடகை உயர்வு காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்பதற்காக வருத்தம் தெரிவித்த அவர்கள், உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அரசு தங்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அதே நேரத்தில், அனைத்து மினி லாரி உரிமையாளர்களும் ஜூன் 15ஆம் தேதி முதல் 15 சதவீத கூடுதல் வாடகையை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சங்கம் கேட்டுக்கொண்டது.

இவ்வாறு மினி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.