June 19, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள நோயாளிகளுக்கு பயன்படுத்த வேண்டிய உபகரணங்கள்…

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையின் அலட்சியம்…

நடவடிக்கை எடுப்பாரா சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அருண் ராஜ்…

ஈரோடு. ஜூன். 11

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையின் புதிய கட்டிட கீழ்தளத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் படுக்கைகள் மற்றும் தள்ளு வண்டிகள் கேட்பாரற்று போடப்பட்டுள்ளது. இதனை முறையாக பயன்படுத்தினால் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் டாக்டர் அருண் ராஜ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது, ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் ஈரோடு மட்டும் அல்லாமல் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் மருத்துவ பயனாளிகள் வந்து, உள் நோயாளிகளாகவும் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இங்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவ உபகரணங்கள் அமைத்திட ஏதுவாக, மருத்துவமனை கட்டிடத்தின் பின்பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு அது திறந்து வைக்கப்பட்டது.

இந்த புதிய மருத்துவமனை கட்டிடத்தில், பல்நோக்கு சிறப்பு உயர் சிகிச்சை பிரிவு என்று அந்தக் கட்டிடத்திற்கு பெயர் வைத்து, அதற்குரிய அதிநவீன தொழில்நோக்கு உயர் சிகிச்சை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. மூலம் பல்வேறு நோய்களுக்கான உயர் சிறப்பு சிகிச்சை இங்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் சுகாதாரத் துறையின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் நல்ல முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேரம் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக இங்கு நோய் கண்டறிதல், அதற்குரிய சிகிச்சை முறைகள் ஆகியவற்றிற்கு இந்த புதிய அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பயனுள்ளதாக இருக்கின்றது.

இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்து தங்களுடைய உடல் ரீதியான பாதிப்புகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை எடுத்து செல்கின்றனர்.

அதே நேரம் இந்த பல்நோக்கு சிறப்பு உயர் சிகிச்சை பிரிவில் பல்வேறு குறைபாடுகளும் உள்ளதாகவும், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் அதனால் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் இந்த மருத்துவமனை மீது ஒரு குற்றச்சாட்டையும் வைக்கின்றனர்.

பொதுமக்களின் இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில், புதிய கட்டிடத்தில் கீழ்த்தரத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய, பல்வேறு மருத்துவ உபகரணங்கள் அங்கு பழைய இரும்பு குவியல் போல் வைக்கப்பட்டிருப்பது மிக அவலம்.

குறிப்பாக பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த புதிய மருத்துவமனை கட்டிடத்தில், நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய, படுக்கைகள், சக்கர நாற்காலி வண்டிகள் உள்ளிட்ட பல மிக முக்கியமான உபகரணங்கள், பயன்படுத்தப்படாமல் தேவையற்ற முறையில் வீணாக அங்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனை முறையாக மருத்துவமனை நிர்வாகம் பயன்படுத்தினால் பல்வேறு நோயாளிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். ஆனால் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகம் இது போன்ற நோயாளிகளுக்கு தேவையான உபகரணங்களை கேட்பாரற்று கிடப்பில் போட்டுள்ளதால் பாதிக்கப்படுவது என்பது என்னவோ இந்த அரசு தலைமை மருத்துவமனையை நம்பி வரும் நோயாளிகளும் பொதுமக்களும் தான்.

அதுபோக புதிய கட்டிடத்தில் பயன்படுத்துவதற்காக வாங்கப்பட்ட இந்த மருத்துவ மனை உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதால் லட்சக்கணக்கான ரூபாய் அரசுக்கு இழப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையின் அதைவிட மருத்துவர் சசிரேகாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது இனிமேல் அந்த மருத்துவ உபகரணங்களை முறையாக நோயாளிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கின்றோம் என்று தெரிவித்தார்.

ஆனால் அந்த உபகரணங்கள் வாங்கப்பட்டு வாகனங்கள் நிறுத்துமிடத்தில் போடப்பட்டு பல மாத காலங்கள் ஆகிறது என்று தெரிகிறது. ஏன் இத்தனை நாள் அதனை நோயாளிகளுக்கு பயன்படுத்தவில்லை என்பது ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகத்திற்கு வெளிச்சம்.

நிலையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசும், புதிய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அருண் ராஜூம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்தால் நல்லது.

இதற்கிடையே அப்பகுதிக்கு சென்று, இது குறித்து செய்தி வெளியிட புகைப்படம் எடுத்த போது மருத்துவமனை ஊழியர்கள் என்று சொல்லிக்கொண்டு இரண்டு பேர் நம்மிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த உபகரணங்கள் அங்கிருந்து அகற்றப்படும் வேளையிலும் மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.