மேற்கு மண்டலத்தில் முக்கியமான தேசிய நெடுஞ்சாலையாக காணப்படும் NH44 சாலையில் நடந்து வரும் பணிகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கடும் போக்குவரத்து நெரிசலால் தாமதம் ஏற்படுகிறது. இதற்கு விரைந்து தீர்வு காண கோரிக்கை விடுத்துள்ளனர்.
NH44 என்ற பெயரை கேட்டதும் நினைவிற்கு வரும் முதல் விஷயம், இதுதான் இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை. காஷ்மீரில் தொடங்கி கன்னியாகுமரி வரை நீள்கிறது. குறிப்பாக கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் இருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலம் வருகிறது. தமிழகத்தின் மேற்கு மண்டலத்தை கர்நாடகா உடனும், தெற்கு மண்டலத்துடனும் இணைக்கிறது. NH44 ஓசூர் சாலையில் நடக்கும் பணிகள் சமீபத்தில் கூட தொப்பூர் மலைப் பாதையில் ஏற்படும் விபத்துகளை தடுக்க 6.6 கிலோமீட்டர் நீளத்தில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருவது பற்றி கேள்விப்பட்டிருப்போம். இதில் தற்போதைய பிரச்சினை என்பது NH44ல் ஓசூர் அருகில் சாலை பணிகள் நடந்து வருகின்றன. இது வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.



அப்படியென்ன பணிகள் நடக்கின்றன எனக் கேட்கலாம். சாலைகள் அகலப்படுத்துதல், விபத்துகள் நிகழும் பிளாக்ஸ்பாட்களை கண்டறிந்து அங்கெல்லாம் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் விபத்தில்லா பகுதியாக மாற்றுதல், நெருக்கடியான இடங்களில் உயர்மட்ட சாலை அல்லது சுரங்க வழிச் சாலை அமைத்தல் போன்ற பணிகள் நடக்கின்றன. இதன் காரணமாக சாலைகள் மிகவும் குறுகியதாக மாறியுள்ளன.
பெங்களூரு டூ சேலம் – 2 வழிச் சாலையாக சுருங்கியது
6 வழிச் சாலையாக இருந்த நெடுஞ்சாலை வெறும் 2 வழிச் சாலையாக மாறி வாகனங்களை அனுமதித்து வருகின்றன. இது தினசரி அலுவலகம் செல்வோர், வெளியூர் பயணங்கள் மேற்கொள்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எரிபொருள் செலவு, நேர விரயம், கூடுதல் நிதிச் செலவு போன்றவற்றை நோக்கி தள்ளி விடுகிறது. உரிய நேரத்திற்கு போய் சேர முடியவில்லை என்பது தான் பலரது வேதனையாக உள்ளது. இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கிருஷ்ணகிரி போக்குவரத்து போலீஸ் எங்கே?
இதுபற்றி பெங்களூருவில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த அசோக் என்பவர் கூறுகையில், ஒருசில வாரங்களில் முடிந்து விடும் என்று பார்த்தால் மாதக்கணக்கில் பணிகள் தொடரும் என்று தெரிகிறது. போக்குவரத்து காவலர்கள் எங்கே? அவர்கள் ஏன் தினசரி போக்குவரத்தை சரிசெய்ய வருவதில்லை? கடும் வாகன நெரிசல் ஏற்படுவது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அப்புறம் ஏன் மாற்று வழித்தடத்தில் திருப்பி விடவில்லை. இவ்வளவு சிரமத்திற்கு மத்தியிலும் டோல் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்தவில்லை.ஓசூர் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்
மத்திய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால் ஓசூர் சாலை பணிகளால் எரிபொருள் வீணாவது தான் மிச்சம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து ஓசூர் பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்களிடம் கேட்கையில், ஒட்டுமொத்த சாலை பணிகளையும் ஒரே மூச்சில் முடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒவ்வொரு கட்டமாக செயல்படுத்தலாமே? கனரக வாகனங்களை வேறு பாதையில் திருப்பி விட வேண்டும் என்றனர்.
கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ் குமார் ஐஏஎஸ் நடவடிக்கை
போக்குவரத்து மேலாண்மையை உறுதி செய்ய வேண்டும். இந்த நேரத்திலாவது டோல் கட்டணம் வசூலிப்பதில் தற்காலிக நிவாரணம் வழங்கலாம். வசூலிக்கக் கூடாது. NH44ல் சாலை பணிகள் முடிவடையட்டும். அதன்பிறகு டோல் கட்டணங்களை வசூலிக்கலாம் எனக் குறிப்பிட்டனர். இந்த விஷயத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் ஐஏஎஸ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருமுறை நேரில் ஆய்வு செய்து தினசரி போக்குவரத்து நெரிசலற்ற சூழலை உருவாக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!