மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கிராமங்களில் திடீரென வீசிய சூறாவளி காற்றால் வீடுகள் மற்றும் பயிர்கள் சேதமடைந்து பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மத்தூர் அடுத்த சின்னஆலேரஹள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறாவளி காற்று வீசியது. இந்த காற்றின் வேகம் தாங்காமல் அப்பகுதியில் உள்ள பல வீடுகளின் கூரைகள் மற்றும் ஓடுகள் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தன. மேலும், அங்குள்ள பால்வாடி பள்ளி கட்டிடத்தின் மீதும் காற்று பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், அருகில் உள்ள கே.புதூர் பகுதியிலும் சூறாவளி காற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. இப்பகுதியில் விவசாயிகள் பெரும் பரப்பளவில் பயிரிட்டிருந்த பப்பாளி செடிகள் காற்றில் வேரோடு சாய்ந்து முற்றிலும் நாசமாகின. இதனால் முதலீடு செய்த பணத்தை இழந்து தவிப்பதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பாதிப்பு குறித்து தகவல் அறிந்த தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் முரளி விஜய், பாதிக்கப்பட்ட சின்னஆலேரஹள்ளி மற்றும் கே.புதூர் ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்றார்.
சேதமடைந்த வீடுகளையும், பால்வாடி கட்டிடத்தையும் பார்வையிட்ட அவர், பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து விபரங்களைக் கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, காற்றில் சாய்ந்த பப்பாளி தோட்டங்களையும் பார்வையிட்டு விவசாயிகளுக்கு தார்மீக ஆதரவை வழங்கினார்.
சூறாவளி காற்றால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தங்களுக்கு, வருவாய்த்துறையினர் மூலம் உரிய கணக்கெடுப்பு நடத்தி, அரசு உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்