July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஓசூர் சிப்காட் பகுதியில் கந்துவட்டி புகார்: திமுக மாமன்ற உறுப்பினர் கைது

ரூ. 1.20 கோடி கடனுக்கு ரூ. 2.30 கோடி வட்டி வசூலித்ததாக குற்றச்சாட்டு
ஓசூர்: ஓசூர் சிப்காட் பகுதியில் சிறு தொழிற்சாலை நடத்தி வரும் தம்பதியினரிடம் கந்துவட்டி வசூலித்து மிரட்டியதாக திமுக மாமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
ஓசூர் சின்ன எலசிகிரி பகுதியைச் சேர்ந்த ஜிகே இண்டஸ்ட்ரியல் உரிமையாளர்கள் சுரேஷ் பாபு – மானசா தம்பதியினர், தொழிலுக்காக ஓசூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் சுகாதாரக் குழு தலைவருமான என்.எஸ். மாதேஸ்வரனிடம் ரூ. 1 கோடியே 20 லட்சம் கடன் பெற்றுள்ளனர்.
புகாரின்படி, கடன் பெற்றவர்கள் இதுவரை வட்டியாக மட்டும் ரூ. 2 கோடியே 30 லட்சம் செலுத்தியுள்ளனர். இருப்பினும் மேலும் ரூ. 1 கோடி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
கடந்த 15-ஆம் தேதி என்.எஸ். மாதேஸ்வரன் மற்றும் அவரது மகன் சேரன் ஆகியோர் தம்பதியினரின் வீட்டிற்குள் புகுந்து மிரட்டியதாகவும், மனைவியை வீட்டில் சிறைவைத்து சுரேஷ் பாபுவை வங்கிக்கு அழைத்துச் சென்று ரூ. 21 லட்சம் பறித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனியார் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று நண்பர் மூலம் ரூ. 15 லட்சத்தை GPay மூலம் பெற்றதுடன், இரண்டு வெற்று காசோலைகளையும் மிரட்டிப் பறித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கைது நடவடிக்கை
பாதிக்கப்பட்ட தம்பதியினர் ஓசூர் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், ஓசூர் சிப்காட் போலீசார் கந்துவட்டி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்குப்பதிவை அடுத்து திமுக பிரமுகர் என்.எஸ். மாதேஸ்வரன் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கைதின்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்பட்டதால், அவர் கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.
தலைமறைவாக உள்ள மாதேஸ்வரனின் மகன் சேரனை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

செய்தியாளர் கவியரசு
9900557307