சேலத்தில் மூத்த குடிமக்கள்,மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு.
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா?மூத்த குடிமக்கள்,மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு.
தமிழ்நாட்டில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் மற்றும் கார்டில் திருத்தம் செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், ரேஷன் கடைக்கு வர இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் மட்டும் 1,766 நியாய விலைக் கடைகள் மூலம் 1.11 லட்சம் பயனாளிகள் இத்திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர்.
மார்ச் மாத விநியோகத் தேதிகள்:
வருகிற மார்ச் 2 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில், தகுதியுள்ள பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த இரண்டு நாட்களில் பயனாளிகள் தங்கள் இல்லங்களிலேயே இருந்து பொருட்களைப் பெற்றுக்கொள்ளுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஐஏஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் மார்ச் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது.
ரேஷன் கார்டில் திருத்தம் செய்வது எப்படி?
தாயுமானவர் திட்டப் பயனாளிகள் தங்கள் ரேஷன் கார்டில் (Ration Card) ஏதேனும் மாற்றங்கள் செய்வது குறித்தும் முக்கிய அறிவுறுத்தலை சேலம் மாவட்ட ஆட்சியர் கொடுத்துள்ளார். அதன்படி, ரேஷன் கார்டில் இதுவரை தொலைபேசி எண் அல்லது மாற்றுத்திறனாளி குறித்த விவரங்களைப் பதிவு செய்யாதவர்கள் உடனே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகவரி மாற்றம் ஏதும் இருப்பின் அதைச் சரிசெய்து கொள்ள சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர வேறு ஏதேனும் சிக்கல்கள் இருந்தாலும் குடிமைப் பொருள் வட்டாட்சியர் அல்லது வட்ட வழங்கல் அலுவலரை (TSO) அணுகித் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
தாயுமானவர் திட்டம் அறிவுறுத்தல்
மேலும், ரேஷன் பொருட்கள் விநியோகத்தின் போது ஏதேனும் குறைகள் இருந்தால் அல்லது பொருட்கள் வீடு தேடி வரவில்லை என்றால், உடனடியாக வட்ட வழங்கல் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தாயுமானவர் திட்டத்தில் புதிதாக சேர முடியுமா?
தாயுமானவர் திட்டத்தில் 65 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருந்தால் சேர்ந்து கொள்ள முடியும். 65 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருப்பின் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்துக்கு சென்று, இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்களாக இருப்பின் இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மாற்றுத் திறனாளிகளும் இதே நடைமுறையை பின்பற்ற வேண்டும். இதுதவிர இன்னொரு வாய்ப்பும் இருக்கிறது.
மாதந்தோறும் பொதுவிநியோக திட்ட குறைத்தீர்ப்பு முகாம்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடக்கும். இதில் கலந்து கொண்டும் தாயுமானவர் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மனு கொடுக்கலாம். தேவைப்படுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election