2026-இன் தேர்தல் கணக்கு.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. அதில் ஒன்று மேட்டூர். இந்த பெயரை கேட்டாலே புகழ்பெற்ற மேட்டூர் அணை தான் நினைவிற்கு வரும்.
இதுதவிர பிரபலமான மால்கோ, ஜே.எஸ்.டபிள்யூ, கெம்பிளாஸ்ட் போன்ற நிறுவனங்கள் மேட்டூர் தொகுதியில் இருக்கின்றன. இங்கு 1957ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் திமுக, அதிமுக, காங்கிரஸ், சிபிஎம், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
மேட்டூர் தொகுதியில் பாமகவின் செல்வாக்கு
குறிப்பாக வன்னியர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வருவதால் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர். மேலும் கவுண்டர்கள், ஆதிதிராவிடர்களும் பெருவாரியாக இருக்கின்றனர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமகவின் எஸ்.சதாசிவம் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் ஸ்ரீனிவாசபெருமாள் 656 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
வன்னியர் வாக்கு வங்கி கணக்கு
இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி என்ற கேள்வி எழுந்துள்ளது. வன்னியர்களின் வாக்குகளை பெருவாரியாக அறுவடை செய்யும் கட்சி எனக் கருதப்படும் பாமக, தற்போது இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கிறது. ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் போக்கால் நிர்வாகிகளும் தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர். இவர்களை ஒன்றிணைக்கும் வேலையை தான் கையிலெடுப்பதாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
மீண்டும் பாமக ஒன்றுபடுமா?
எனவே ஒன்றுபட்ட பாமக உருவாகுமா, அது அதிமுக கூட்டணியில் இடம்பெறுமா, கடைசியில் வெற்றிக் கனியை பறிக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது. அதேசமயம் மேட்டூர் தொகுதியை பாமக நிச்சயம் குறிவைக்கும் என்பதில் சந்தேகம் இருக்கது என்கின்றனர். மேலும் அதிமுக சார்பிலும் எடப்பாடி பழனிசாமியிடம் சீட் கேட்டு காய் நகர்த்தி வருகின்றனர். சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மேச்சேரி ஒன்றிய செயலாளர்கள் இருவர் என லிஸ்ட் பெரிதாக நீள்கிறது.
2026 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்
இதற்கிடையில் பாமகவின் சிட்டிங் எம்.எல்.ஏ எஸ்.சதாசிவம் மீண்டும் சீட் கேட்கிறார். இவர் அன்புமணி ஆதரவாளராக இருக்கிறார். எனவே 2026 தேர்தலுக்கு இவர்கள் தரப்பில் விருப்ப மனு அறிவிப்பு வெளியானதும், மேட்டூர் தொகுதியை கேட்டு எஸ்.சதாசிவம் மனு அளித்திருப்பதாக கூறுகின்றனர். திமுக தரப்பில் முன்னாள் எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன் குறிவைத்திருக்கும் தொகுதிகளில் ஒன்றாக மேட்டூர் இருக்கிறது.
அதிமுக – பாமக கூட்டணிக்கு வியூகம்
இதுதவிர கடந்த முறை போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஸ்ரீனிவாசபெருமாள், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரவி உள்ளிட்டோரும் சீட் எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக – பாமக கூட்டணி ஏற்பட்டால் மேட்டூர் தொகுதியை எளிதில் வசப்படுத்தி விட வாய்ப்புள்ளது. ஆனால் தற்போதைய சூழலில் வாக்கு வங்கி பிரிந்து கிடக்கிறது.
மேட்டூர் தொகுதியில் தீராத பிரச்சினைகள்
இதை பயன்படுத்தி தங்கள் கொடியை நாட்டுவதற்கு திமுக வியூகம் வகுத்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேட்டூர் தொகுதியில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருக்கின்றன. மேச்சேரி தனி தாலுகா, காவிரி குடிநீர் திட்டம் விரிவாக்கம் போன்ற நிலுவையில் உள்ளன.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!