July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை – பொதுமக்கள் அதிர்ச்சி

மருங்காபுரி, ஜூலை 10:

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம், துவரங்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்டையம்பட்டி கிராமத்தில் அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொண்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜுவின் மகன் சத்தியமூர்த்தி, சீனிவாசன் மகன் பரமேஸ்வரன் மற்றும் திருப்பதி மகன் பாண்டுரங்கன் ஆகியோர் அடுத்தடுத்து உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களில் சத்தியமூர்த்தி மற்றும் பரமேஸ்வரன் ஆகியோர் சுமார் 10 நாட்களுக்கு முன்பு தங்களது வீடுகளை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில், பாண்டுரங்கன் கடந்த 9-ம் தேதி இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டில் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அருகில் பூட்டப்பட்டிருந்த சத்தியமூர்த்தி மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரது வீடுகளையும் பார்வையிட்டபோது, அந்த வீடுகளின் முன்பக்க கதவுகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு, பீரோக்களில் இருந்த நகை மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து பாண்டுரங்கன் துவரங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மூன்று வீடுகளிலும் ஆய்வு மேற்கொண்டு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஒரே பகுதியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் கொண்டையம்பட்டி மற்றும் சுற்றுவட்டார மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் காவல் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், கொள்ளையர்களை விரைந்து கைது செய்து திருடப்பட்ட பொருட்களை மீட்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.