July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

போச்சம்பள்ளி வேளாண் பதப்படுத்தும் நிலையத்தில் அமைச்சர் ஆர். வினோத் திடீர் ஆய்வு! போச்சம்பள்ளி முதன்மை வேளாண் பதப்படுத்தும் நிலையம் இடமாற்றமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள முதன்மை வேளாண் பதப்படுத்தும் நிலையத்தில், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர்.வினோத் அவர்கள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, பதப்படுத்தும் நிலையத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் அமைச்சர் நேரடியாகச் சென்று, அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இயந்திரங்களின் செயல்பாடுகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து, நிலையத்தின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர். வினோத் தெரிவித்ததாவது:
“கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது இயங்கி வரும் முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை, விவசாயிகளின் வசதிக்காக வேறு இடத்திற்கு மாற்ற முடியுமா என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறோம். அதுதொடர்பான சாத்தியக்கூறுகளைக் கண்டறியவே இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.”
“மா விவசாயிகளுக்கு தவெக அரசு என்ன செய்யப்போகிறது?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்: “மா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசிடம் உரிய மானியத் தொகை கோரப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் மத்திய அரசு இந்த மானியத் தொகையை விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொகை கிடைத்தவுடன் விவசாயிகளுக்கு அது முறைப்படி சென்றடையும்,” என்று பேசினார்.
இந்த ஆய்வின் போது துறை சார்ந்த உயர் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் என யாரும் பங்கேற்கவில்லை. திடீர் ரகசிய ஆய்வு என்பதால், யாருக்கும் தெரியபடுத்தவில்லை என அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.