July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சியில் பரபரப்பு சம்பவம்

பீமநகர் வேணுகோபால் கோயிலில் சாமி சிலை திருட்டு

சுவர் ஏறி குதித்து சிசிடி கேமராவை உடைத்து மர்ம ஆசாமிகள் அட்டூழியம் :

திருச்சி ஜூலை 1-

திருச்சி பீமநகர் பகுதியில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆதி காளிகாம்பாள், ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணர் கோயில் உள்ளது.இது பழமையான கோயில் ஆகும். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கோயில் நடை சாத்தப்பட்டு அர்ச்சகர்
கோயிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.. இந்நிலையில் நேற்று காலை கோவிலுக்கு வந்த அர்ச்சகர் நிஷாந்த் மனோஜ் கோயிலின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோயில் வளாகத்திற்குள் இருந்த உற்சவர் சன்னதியின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த பொழுது அங்கு வைக்கப்பட்டிருந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிலையை மர்ம நபர்கள் சிலர் முன்பக்க கதவை திறக்காமல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது இதையடுத்து போலீசார் விசாரணை செய்தபோது மர்ம ஆசாமிகள் கோயில் அருகில் உள்ள சுவரில் ஏறி குதித்து உள்ளே வந்து சிலையை திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களையும் மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் கோயிலின் மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.
இது குறித்து கோவில் நிர்வாக அலுவலர் அனுராதா செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகப்பிரியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையில் தகவல் அறிந்து இன்று கோவிலுக்கு வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், செசன்ஸ் கோர்ட் போலீசாருடன் இணைந்து இத்திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் கோவிலில் சிலை திருட்டு நடந்திருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.