புதுச்சேரி:
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஒப்பந்த ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தேசிய மக்கள் முன்னணி மற்றும் புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், மாணவர் கூட்டமைப்பின் நிறுவனருமான சீ. சு. சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் முறையாக அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அப்போதைய நிதி நெருக்கடியிலும், ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க அவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குக் குறைந்த ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார சிக்கல்கள் நீடித்து வருகின்றன. இத்தகைய சூழலில், மீண்டும் புதியதாக ஒப்பந்த ஆசிரியர்களை நியமிப்பது ஏற்புடையதல்ல.
பல ஆண்டுகளாகச் சொற்ப ஊதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல், சில வருடங்கள் கழித்து அவர்களை வேலையை விட்டு நீக்கும் செயல்களை அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பணி அனுபவத்தின் அடிப்படையில் அரசாங்கம் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்வதற்கான ஆணைகளை வழங்க வேண்டும்.
தவறும் பட்சத்தில், புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்து அரசு கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து, வீதியில் இறங்கி மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என தேசிய மக்கள் முன்னணி மற்றும் மாணவர் கூட்டமைப்பு சார்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்