June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பில்ராம்பட்டு ஊராட்சியில் மின்மாற்றி பழுது – 40 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் விவசாயிகள்
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட பில்ராம்பட்டு ஊராட்சி அப்பனந்தல் கிராமத்தில் உள்ள SS-2 KV-100-2 மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனை இதுவரை சரிசெய்யாமல், கண்டாச்சிபுரம் உதவி மின் பொறியாளர் அலட்சியமாக செயல்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மின்மாற்றி பழுதடைந்ததன் காரணமாக, அப்பனந்தல் கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் போதிய மின்சாரம் இல்லாமல் காய்ந்து நாசமாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பழுது நீக்க கோரி கடந்த 40 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து கண்டாச்சிபுரம் மின்சார அலுவலகத்திற்கு நடையா நடந்து வந்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், உதவி மின் பொறியாளர் கண்டும் காணாமல் இருந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு மற்றும் மின்சார வாரியம் விவசாயிகளின் நலனில் அக்கறையில்லாமல் செயல்படும் மின்சார அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) வலியுறுத்தியுள்ளது.
மேலும், பழுதடைந்துள்ள இரண்டு மின்சாரப் பெட்டிகளை உடனடியாக சரிசெய்து மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட மின்சார அலுவலகம் முன்பு சிபிஎம் கட்சி சார்பில் திடீர் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அப்பனந்தல் கிளை, சு.பில்ராம்பட்டு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.