July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

17.07.2026

புதுச்சேரியில் தொடர் போலி மருந்து தயாரிப்புகளுக்கு
என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசே காரணம்
திமுக அமைப்பாளர் இரா. சிவா பகீர் குற்றச்சாட்டு !

செய்தி அறிக்கை

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ச்சியாக பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் போலி மருந்து தயாரிப்புகளுக்கு ஆளும் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று திமுக அமைப்பாளர் இரா. சிவா குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: –

புதுச்சேரி மாநிலத்தில் முந்தைய போலி மருந்து குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருவதும், சிபிஐ அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த குற்றத்தில் அரசு அதிகாரி கைதாகி இருப்பதும் நாடே அறிந்தது. இந்த நிலையில், மீண்டும் புதுச்சேரியில் அதே வழியில் வேறு ஒரு போலி மருந்து தொழிற்சாலை இயங்குவதும், அங்கே 625 வகையான போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு இலங்கை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்ததும் அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு குற்றம் நடந்து அது விசாரணையில் உள்ள போது அதே குற்றத்தை மீண்டும் இந்த மண்ணில் நிகழ்த்துவதற்கு யார் அவர்களுக்கு தைரியம் கொடுத்தது. புதுச்சேரியில் நடந்து வரும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையும், குற்றவாளிகளோடு அவர்கள் கொண்டிருக்கும் நெருக்கமுமே இதற்கு காரணம்.

முதல் போலி மருந்து வழக்கில் நடவடிக்கை தாமதப்பட்ட நிலையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டங்களும், அழுத்தமுமே இவ்வழக்கு சிபிஐ–க்கு மாற்றப்பட்டு வேகமெடுத்தது. அதே பாணியில் தான் இன்றைய குற்றத்திற்கும், குற்றவாளிகளுக்கும் துணையாக இந்த அரசு உள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒட்டுமொத்த அமைச்சரவை அதிகாரத்தையும் கையில் வைத்துள்ள முதல்வர் ரங்கசாமி, இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மக்களின் உயிரோடு விளையாடும் போலி மருந்து குற்றம் பற்றி வாய் திறக்காமல் இருப்பது வாக்களித்த மக்களுக்கு அவர் செய்யும் மிகப் பெரிய துரோகம் ஆகும். அவரது மவுனமே குற்றச்செயல்களுக்கு தூண்டுகோளாக அமைந்துவிடக்கூடாது. இந்த அரசுக்கும், குற்றவாளிகளுக்குமான தொடர்பு முழுமையாக வெளிக்கொணரப்பட வேண்டும்.

இது போன்ற குற்றங்களை கட்டுப்படுத்தும் அமைப்பாக உள்ள புதுச்சேரி மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறையின் அலட்சியமும், கண்காணிப்பு இன்மைப்பற்றி முதல்வர் அக்கறை கொள்ள வேண்டும். பல ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த அந்த தொழிற்சாலையில் என்ன மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் இருந்தது அவர்களின் நிர்வாகத் தோல்வியையும், சாத்தியமான ஊழலையும் காட்டுகிறது. மேலும் இதில் மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிக்கும், ஆளும் கட்சி பிரமுகருக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவும் செய்தி பரவுகிறது.

ஆகவே, இத்தகைய தொடர் குற்றங்களுக்குப் புதுச்சேரியை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். இந்த இரண்டாவது போலி மருந்து விவகாரத்தையும் தற்போதைய சிபிஐ விசாரணையோடு இணைத்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். போலி மருந்து தொழிற்சாலைகள் வளர காரணமாகவும், அலட்சியமாகவும் இருந்த சம்பந்தப்பட்ட மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்து, அவர்கள் மீதும் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். புதுச்சேரியில் மீண்டும் போலி மருந்து தயாரிப்பை முற்றிலும் ஒழிப்பதற்கு ஏதுவாக புதுச்சேரியில் உள்ள அனைத்து மருந்து தொழிற்சாலைகளையும், அவற்றின் மூலப்பொருட்கள் கொள்முதல் விவரங்களையும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதற்காக ஓய்வு பெற்ற நிதிபதி தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை புதுச்சேரி அரசு நியமித்து அவர்கள் சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி மருந்து விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டும். தொடர்ந்து புதுச்சேரி அரசு இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டுமேயானால் பொதுமக்களைத் திரட்டி மாபெரும் தொடர் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்க நேரிடும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.