July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாவீரன் பொல்லான் 221-வது நினைவு நாள்: ஈரோட்டில் அருந்ததியர் சமூக கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை வேங்கைகள் கட்சியினர் அஞ்சலி!

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள ஜெயராமபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் அவர்களின் 221-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு அவரது உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். விடுதலை வேங்கைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழின்பன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி கூட்டத்தில், அக்கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் வேங்கை வீரமுத்து முன்னிலை வகிக்க, மாநிலப் பொருளாளர் சௌந்தரராஜன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் மகேந்திரன் மற்றும் ஈரோடு மாநகர தலைவர் வேங்கை நடராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட கவன ஈர்ப்பு அணிவகுப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அருந்ததியர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அருந்ததியர்க்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும், தூய்மைப்பணியாளர் மற்றும் மாநகராட்சி, நகராட்சி தொழிலாளர்களுக்குத் தொகுப்பூதியம் வழங்க வேண்டும், அருந்ததியர் நல வாரியம், உள் இட ஒதுக்கீடு கண்காணிப்பு குழு மற்றும் பட்டியல் இனத்தவரை தொழில் முனைவோராக மாற்ற அரசு தாட்கோ வங்கி ஆகியவை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி உரை நிகழ்த்தினர்.