June 17, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

போலி மருந்து வழக்கில் லஞ்சம், போலீஸ் பாதுகாப்பில் ஹவாலா பணம் கடத்தலா? அரசு பதிலளிக்க தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் சிவா கோரிக்கை

தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் கா. சிவா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியை உலுக்கிய போலி மருந்து வழக்கில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள், இந்த வழக்கின் பின்னணியில் மிகப்பெரிய அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசியல் தலையீடு நடைபெற்றிருக்கிறதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

சி.பி.ஐ. வழக்கை முடக்குவதற்காக ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டிருப்பது ஒருபுறம் இருக்க, அந்த பணத்தை ஹவாலா ஏஜெண்டிடம் ஒப்படைக்க எடுத்துச் செல்லும்போது, புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகரின் பரிந்துரையின் பேரில் காவல்துறை வாகனம் பாதுகாப்பு வழங்கியதாக வெளியாகியுள்ள தகவல் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

இது உண்மையெனில், புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதற்கான மிகப்பெரிய சான்றாகும். குற்றச்சாட்டுக்குள்ளான நபர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு அரசியல் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதா? காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது? சட்டத்தின் ஆட்சியா அல்லது அரசியல் செல்வாக்கின் ஆட்சியா?

மக்களின் சார்பில் சில கேள்விகளை அரசிடம் முன்வைக்கிறோம்:

ஹவாலா பணம் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் வாகனத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது யார்? அந்த அரசியல் பிரமுகர் யார்? சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் யார்? அரசு இதுவரை ஏன் மௌனம் காக்கிறது? இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை பாதுகாக்கும் முயற்சி நடைபெறுகிறதா?

இந்த விவகாரத்தில் பெயர் வெளியாகும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வெறும் கீழ்மட்ட அதிகாரிகளை பலிகடாவாக்கி உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

முதலமைச்சரும், உள்துறை பொறுப்பில் உள்ள அரசும் இந்த விவகாரத்தில் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

போலி மருந்து வழக்கில் தொடங்கிய இந்த விசாரணை, தற்போது அரசியல் அதிகாரமும், காவல்துறை இயந்திரமும் எவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைக் காட்டும் மிகப்பெரிய ஊழல் விவகாரமாக மாறியுள்ளது. உண்மையை மறைக்க முயன்றால், அதற்கு எதிராக மக்கள் மத்தியில் தேசிய மக்கள் முன்னணி தீவிரமான ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்கும் என்பதை எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.